கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற படகு இன்று ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உகாண்டா, தான்சானியா மற்றும் கென்யா நாடுகளுக்கு இடையில் ஓடும் மிகப்பெரிய விக்டோரியா ஏரியில் ‘போயேட்டா வோட் அவாஸ்’ இசைக் குழுவைச் சேர்ந்த 26 கலைஞர்களை ஏற்றியபடி கென்யாவில் உள்ள நிடேண்டா தீவை நோக்கி இன்று ஒருபடகு சென்று கொண்டிருந்தது.
ஏராளமான இசை கருவிகளும் ஏற்றப்பட்டிருந்ததால் அதிக பாரத்தால் திடீரென்று நிலைதடுமாறிய அந்தப் படகு ஏரியில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கிய அனைவரும் நீந்தி கரையேறி உயிரை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தனர். ஆனால், அவர்களில் ஒன்பதுபேர் மூச்சுத்திணறி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் 17 பேரை உயிருடன் மீட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சென்றவர்களை ஏற்றிச் சென்ற ஒரு படகு, இதே ஏரியில் மூழ்கிய விபத்தில் 13 பேர் பலியானது, நினைவிருக்கலாம்.