கும்பகோணத்தில் புதிய அரசு பேருந்துகள் தொடக்க விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன், டிரைவரை எழுந்திருக்கச் சொல்லி, தானே பேருந்தை இயக்கினார். அச்சத்தின் காரணமாக அவர் பேருந்தில் ஏறச் சொல்லியும், அ.தி.மு.கவினர் ஏற மறுத்தனர். பின் பொதுமக்கள் மட்டும் பேருந்தில் ஏறினர்.
அ.தி.மு.க நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அக்கட்சியினர் வித்தியாசமான முயற்ச்சிகளில் ஈடுபட்டு தங்களை முன்னிலை படுத்தி கொள்வதை அதிகம் விரும்புகின்றனர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடினார். இதனை தொடர்ந்து இன்று கும்பகோணத்தில் கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் புதிய பேருந்து தொடக்க விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, மயிலாடுதுறை தொகுதி எம்.பி பாரதிமோகன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, போக்குவரத்து கழக இயக்குநர் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, “தமிழக முதல்வர் இரு தினங்களுக்கு முன் 421 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கும்பகோணம்கோட்டத்துக்கு 99ம், கும்பகோணம் பணிமனைக்கு 13 பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 13 பேருந்துகளின் தொடக்க விழா நடைபெற்றது. தனியார் பேருந்துகளுக்கு நிகராக இந்த பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பேருந்துகளில் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை.தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்ய தேவையான சாக்குகள் போதிய அளவு கையிருப்பு உள்ளது. கடைமடை பகுதி வரை தற்போது தண்ணீர் தங்கு தடையில்லாமல் செல்கிறது” என்றார்