அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் பெயர் சூட்டப்படும் என அந்தப் பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்க தலைவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி செய்துள்ளனர்.
இந்த நிதி உதவியை அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் பெயர் சூட்டப்படும் என அந்தப் பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்க தலைவர் ரேணு கடோர் அறிவித்துள்ளார்.
51 மில்லியன் டாலர் மதிப்பில் (சுமார் ரூ.382 கோடி) கட்டப்பட்ட அந்த கட்டிடத்தின் ஒரு தளத்துக்கு ஏற்கனவே அவர்களது பெயர் சூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த துர்கா அகர்வால் டெல்லி பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து விட்டு, 1968-ம் ஆண்டு ஹூஸ்டன் சென்றார். அங்கு அவர் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் குல்லன் பொறியியல் கல்லூரியில் படித்து முதுநிலைப்பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.
மாணவர்களுக்கு துர்கா அகர்வால் விடுத்துள்ள செய்தியில், “மாணவர்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு இலக்கையும், கடின உழைப்பாலும், நிலைத்தன்மையாலும், உறுதியாலும் அடைய முடியும்” என கூறி உள்ளார்.