சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை துறைமுக தின விழா மற்றும் நவீன பன்னாட்டு பயணிகள் முனையம் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தை திறந்துவைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சென்னை துறைமுக தலைவர் ப.ரவீந்திரன், சுற்றுலாதுறை ஆணையர் வி.பழனிகுமார், சுங்கத்துறை ஆணையர் அஜித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தின் மொத்த பரப்பளவு 2 ஆயிரத்து 880 சதுர மீட்டர் ஆகும். 17 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த முனையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
விழாவில், சிறப்பாக பணிபுரிந்த துறைமுக அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் 3 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் சென்னை துறைமுகம் பெரிய துறைமுகமாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த துறைமுகத்தின் நிகர லாபம் ரூ.6 கோடியாக இருந்தது. தற்போது இதன் நிகர லாபம் ரூ.230 கோடியாக உயர்ந்து உள்ளது.
இந்தியாவின் முதன்மை துறைமுகமாக இதனை கொண்டு வர சில பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை உயிர்பெற செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக துறைமுக அதிகாரிகள், சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
கூடிய விரைவில் இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என்று நம்புகிறேன். தமிழக சுற்றுலா துறையானது கன்னியாகுமரி, ராமேசுவரம், மணப்பாடு, மகாபலிபுரம் வரை பயணிகள் போக்குவரத்துக்கான ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.
அந்த திட்டத்தை திருவனந்தபுரம் கோவளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்சிடம் தெரிவித்து உள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் கூறுகையில், ‘உலக அளவிலான சுற்றுலாத்துறையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது இந்தியா 65-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் 2-வது இடத்திலும், உள்நாட்டு சுற்றுலாத்துறையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை முதல் கன்னியா குமரி வரையிலான கடல்வழி பயணிகள் போக்குவரத்து உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.