சுவிசில் தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் இன்று (11.10.2018) நடைபெறவிருந்த தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரேயுடனான சந்திப்பானது தமிழின உணர்வாளர்களின் நான்குமுனை முற்றுகையினால் சுவிஸ் காவற்துறையினரால் முற்றாக நிறுத்தப்பட்டது!
முள்ளிவாய்க்காலில் எம்மினத்தை திட்டமிட்டு கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம் ஒட்டுமொத்த தமிழினவழிப்பை மூடிமறைக்கவும் தமிழர்களின் உரிமைகளை நசுக்கவும், சர்வதேச அரங்கில் தமிழர்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் எழுச்சியின் வீச்சையும் புலம்பெயர் தேசங்களில் இல்லாதொழிக்கவும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் தனது சூழ்ச்சியான வேலைத்திட்டங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் செய்ய முனைப்புக்காட்டி வருகின்றது.
இந்த திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் ஓர் அங்கமாகவே, சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வடதழிழீழத்தின் சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உள்ளிட்ட குழுவினருடனான கலந்துரையாடல் ஒன்று எமது மக்களின் அமைப்பான ‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்’ பேரில் தன்முனைப்பு அதிகாரங்களுடன் இயங்கும் நிர்வாக தலைவரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இக் கலந்துரையாடலை வர்த்தகப் பெருமக்கள் மற்றும் புங்குடுதீவு இனமான தமிழ்மக்களோடு சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களும் இணைந்து புறக்கணித்தமையானது முள்ளிவாய்க்காலில் எமது இனம் வீழ்த்தப்படவில்லை ஈழத்தமிழினம்;; இன்னும் உயிர்ப்புடனும், நிமிர்வுடனும், தாயகவிடுதலைக் கனவுடனும்தான் உள்ளது என்பதை இவர்களுக்கு உணர்த்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சந்திப்பானது நடைபெறவிருந்த இடத்தின் நான்கு முனைகளும் தமிழின உணர்வாளர்களினால் முற்றுகையிடப்பட்டது. போராட்டத்தின் கூர்மையையும் மக்களின் உணர்வையும் உணர்ந்த சுவிஸ் காவற்துறையானது இச்சந்திப்பை முற்றாக நிறுத்தியதோடு, கூடிநின்ற அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கேடகப்பட்டதுக்கமைவாக மக்கள் அனைவரும் மெது மெதுவாக போராட்ட களத்தை விட்டு கலைந்து சென்றனர்.
எமது சர்வதேச பலத்தையும் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பலத்தையும் சிதைக்கும் சிறிலங்கா பேரினவாத அரசின் நயவஞ்சக நோக்கங்களை புரிந்துகொள்வதோடு, சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இப்படியான சந்திப்புகளை அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதோடு அவர்கள் எங்கெல்லாம் கூடுகின்றனரோ அங்கெல்லாம் இனமானத்தமிழராய் அணிதிரண்டு இனப்படுகொலையாளர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டுமெனவும் இத்தருணத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.
மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் (இருபது மணித்தியாலங்கள்) எம்மால் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டு தமது வலுவான உணர்ச்சி மிக்க எதிர்ப்பினை காட்டிய இனமானத்தமிழ் மக்களுக்கும், மிகவும் கண்ணியத்துடன் எமது உணர்வுகளை மதித்து தமது கடமைகளைச் செய்த சுவிஸ் காவற்துறையினருக்கும் எமது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.