போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் விடிய, விடிய வருமான வரி சோதனை

247 0

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை 2-வதுநாளாக இன்றும் நீடிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிந்தாதிரிபேட்டை தெருவில் உள்ள நகைக்கடைகள் மீது வரி ஏய்ப்பு புகார் சென்றது. இதையடுத்து, சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரி சுப்பிரமணியன் திருவண்ணாமலைக்கு வந்தார்.

இவருடைய தலைமையில் வருமானவரித்துறை மற்றும் வணிக வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய 14 பேர் குழுவினர் 6 கார்களில் நேற்று மாலை 3.30 மணியளவில் போளூர் வந்தனர். 2 நகைக்கடைகளில் சோதனை நடத்தினர்.

வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி விட்டு ஊழியர்களை மட்டும் கடைக்குள் வைத்து கொண்டனர். கடைகளின் முன்பக்க கதவை அடைத்து விட்டு சோதனையை தீவிரப்படுத்தினர்.

நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2 நகைக்கடை ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பாமல் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

சோதனை நடத்தப்பட்ட நகைக்கடைக்கு சொந்தமான ஜவுளிக்கடை எதிரிலேயே உள்ளது. அதிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், நகைக்கடை அதிபர்களின் வீடுகள், கார்டன்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

நேற்று மாலை தொடங்கிய வருமான வரி சோதனை 2-வது நாளாக இன்றுவரை நீடிக்கிறது. கணக்கில் வராத வரவு-செலவு ஆவணங்கள் சிக்கியுள்ளதால், வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Leave a comment