திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்திற்குள்ளாகிய நிலையில், விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதிகாலை 1.20 மணியளவில் திருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைவான உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் அதனருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசியது.
எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து விமானம் நேராக துபாய் சென்றடைந்ததாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், திருச்சி விமானநிலையத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளும் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.