சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் வேண்டுகோள்…! “விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம்.

27122 0

தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பை புறக்கணியுங்கள்!

இன உணர்வுமிக்க சுவிஸ்வாழ் தமிழ்மக்களே! விழிப்புடன் செயற்படுங்கள்!
முள்ளிவாய்க்காலில் எம்மினத்தை திட்டமிட்டு கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம், எம் தாயகத்தில் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, எமது மக்களை வாழிடமற்றவர்களாக்குவதுடன், எமது வழிபாட்டு உரிமையை மறுத்ததோடு எமது ஆலயங்களை ஆக்கிரமித்தும், பௌத்த விகாரைகளை நிறுவியும், எம்மண்ணை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தி வருகின்றது. அதேவேளை புலம்பெயர் தமிழ்மக்களின் எழுச்சியும், வர்த்தகரீதியிலான பொருளாதார வளர்ச்சியும் சிங்களப்பேரினவாதத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக புலம்பெயர்; நாடுகளிலும், தாயக மக்களுக்கான வாழ்வியல் அபிவிருத்தி என்ற போர்வையில்இ அரசு என்ற அதிகார வர்க்கத்தினூடாக தாயக தமிழ்மக்களிடையே கையேந்து நிலையை திட்டமிட்ட வகையில் உருவாக்கியும் வருகிறது. அத்தோடு புலம்பெயர் தேசங்களில் வளர்ந்துவரும் உயர்கல்வி தமிழ் மாணவர்களிடையே திரிவுபட்ட தமிழர் வரலாற்றை வாழ்விட அரசுகளினுடாக திணித்து இங்கும் தமிழ்மக்களின் உரிமையை மறுத்து நிற்கின்றது.

ஒட்டுமொத்த தமிழினவழிப்பை மூடிமறைக்கவும்இ தமிழர்களின் உரிமைகளை நசுக்கவும், சர்வதேச அரங்கில் தமிழர்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் எழுச்சியின் வீச்சையும் புலம்பெயர் தேசங்களில் இல்லாதொழிக்கவுமே இவ்வாறான பல திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களிடத்தில் செய்யத் துடிக்கின்றது.

இந்த திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் ஓர் அங்கமாகவே, சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வடதழிழீழத்தின் சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உள்ளிட்ட குழுவினருடனான கலந்துரையாடல் ஒன்று எமது மக்களின் அமைப்பான ‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்’ பேரில் தன்முனைப்பு அதிகாரங்களுடன் இயங்கும் நிர்வாகத் தலைவரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். இவ்வமைப்பின் நிர்வாகத்தில் உள்ள சிலர் சிங்கள இனவாத அரசின் அடிவருடிகள் என்பதை கருத்திற் கொள்வதோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அதனை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் பெரும் அரணாகவும் வலிமையாகவும் விளங்கிய புங்குடுதீவு மக்களின் ஆதரவின்றி செயற்படும் இவர்களுக்கு எம்மினத்தின் உணர்வை அம்மக்களே புரியவைப்பார்கள்.

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளே!

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைப் பிரித்து, தமிழர்களுக்குள் இடைவெளிகளை ஏற்படுத்தி குறிப்பிட்ட எம்மக்களை கூறுபோட்டு இனம்காட்டி, குழுமோதல்களை ஏற்படுத்தி எமது சர்வதேச பலத்தைக் குறைக்கும் நயவஞ்சக நோக்கங்களை புரிந்துகொள்வதோடு, சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிடப்பட்டுக்கொண்டிருக்கும் இப்படியான சந்திப்புகளை அனைத்து தமிழ் மக்களும் புறக்கணியுங்கள். அவர்கள் எங்கெல்லாம் கூடுகின்றனரோ அங்கெல்லாம் இனமானத்தமிழராய் அணிதிரண்டு இனப்படுகொலையாளர்களின் முகத்திரையை கிழியுங்கள். இது போன்ற செயற்பாடுகளை நம் எப்போதும் விழிப்பாய் இருந்து முற்றாகப் புறக்கணிப்பதனூடாக, முள்ளிவாய்க்காலில் எமது இனம் வீழ்த்தப்படவில்லை ஈழத்தமிழினம் இன்னும் உயிர்ப்புடனும், நிமிர்வுடனும், தாயகவிடுதலைக் கனவுடனும்தான் உள்ளது என்பதை இவர்களுக்கு உணர்த்துங்கள்.

நன்றி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
இவ்வண்ணம்,

விஜயரட்ணம் சிவநேசன் (ரகுபதி)
நிர்வாகப் பொறுப்பாளர்
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
பேர்ண், 10.10.2018

Leave a comment