ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புலனாய்வு பத்திரிகை முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகிறது. அதில் முக்கிய சர்ச்சையாக விளங்குவது அனில் அம்பானியின் தேர்வு. ரபேல் விமானங்கள் தொடர்பான வியாபாரத்தை இந்தியாவில் செய்வதற்காக பிரான்சின் டஸ்சால்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பங்குதாரராக இணைந்துள்ளது.
ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்த போது ரபேல் தொழில்நுட்பங்களை பெற்று இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாஜக அரசு செய்த புதிய ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இந்த விவாகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர், ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை முன்வைத்து ரபேல் முறைகேடு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் மேலும் வலுவான குற்றச்சாட்டுக்களை சுமத்த தொடங்கியது. ஆனால், இதற்கு பதில் அளித்த மத்திய அரசோ ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இணைந்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட்(Mediapart) எனும் பத்திரிகை டஸ்சால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது என மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ரபேல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் பிரான்ஸ் பத்திரிகையின் இந்த தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.