அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சரே கவனம் செலுத்த வேண்டும்-ரணில்

226 0

தற்போது சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின்  பலர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. இவ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சரே கவனம் செலுத்த வேண்டும். எனினும்  தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் தொடர்ந்தும் பேசுவோம் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகிய நால்வரும் ஒன்றாக அமர்ந்து உடனடியாக அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் பிரதமர் கேள்வி நேரத்தில்  கோரிக்கை விடுத்தார்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி பிரதமரிடம் கோரிக்கையை முன்வைத்து உரையாற்றும் போது  பிரதமர் மேலும் கூறுகையில்,

2001 காலப் பகுதியில் சில சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பாரதூரமானதாக இல்லாத காரணத்தினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதற்கு பின்னைய ஆட்சியிலும் இவ்வாறு விடுதலைப்புலிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர். எமது ஆட்சியிலும் 2015 ஆம் ஆண்டுக்கும் பின்னர்  நாம் சிலரை விடுவித்துள்ளோம்.

இப்போதும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் குறித்த குற்றங்கள் நிருபிக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்வது குறித்து  நீதியமைச்சருடன் பேசுவதே சிறந்தது. அவர் தற்போது நாட்டில் இல்லை. இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக நாம் தொடர்ந்தும் பேசுவோம் என தெரிவித்தார்.

Leave a comment