தமிழகம் முழுவதும் இன்று(9) முதல் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு அருகே உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் இந்திய வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ அளித்து பின்னர் வாபஸ் பெற்றது.
அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி, ஓமன் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல அந்தமான் பகுதியில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் ஒடிசா கடற்பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் மழை இருக்குமா என்று தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
”தமிழகத்தின் வடமாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், நாகை, திரூவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், சென்னையைப் பொறுத்தவரை நாளை முதல் வறண்ட வானிலையே காணப்படும். சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புண்டு.
உள்மாவட்டங்களான விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, நெல்லை, கோவை, கொடைக்கானல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். கேரளாவின் இடுக்கி, வயநாடு, திருச்சூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அந்தமான் அருகே உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் காற்று வலுவடைந்து நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், 10-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும். ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை இன்று இரவு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அரபிக்கடலில் ஒரு புயல், வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகிய இரு விஷயங்களுக்கு மத்தியில் தமிழகம் இப்போது இருந்தாலும், எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஏனென்றால், அரபிக்கடலில் உருவாகிய புயல் ஓமன் கடற்கரையை நோக்கி நகர்கிறது. அதேபோல , வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசா கடற்கரையை நோக்கியும் செல்லலாம்.
ஆதலால், நாளை முதல் படிப்படியாக மழை குறையும். அடுத்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இன்னும் சில நாட்கள் காத்திருந்தால்,மீண்டும் பரவலாக மழை பெய்யும் நாட்கள் வரும். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருமழையில் தமிழகத்தில் 440 மி.மீ. மழை பெய்ய வேண்டும். அந்த வகையில், 20 சதவீத மழையை மட்டுமே நாம் பருவமழைக்கு முன் பெற்றிருக்கிறோம்.
அதுவரை வாட்ஸ் அப்பில் வரும் எந்தவிதமான வதந்திகளையும் நம்பி, யாருக்கும் பரப்பி பதற்றத்தை உண்டாக்காதீர்கள்”. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.