பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர்.
கடந்த (02.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், போராட்டங்கள் அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டு குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தனர். மறுநாள் 03.09.2018 திங்கட்கிழமை பாரிசில் இருந்து ஜெனிவாநோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு.தவராஜா திவாகரன் அவர்களும் கலந்துகொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்து 17.09.2018 அன்று ஜெனிவாவில் நிறைவுசெய்தார். அந்தப் பயணக் காலப்பகுதியில் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிநாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு அரச பிரதிநிதிகளுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவாக விளக்கியவாறு பயணித்துள்ளார். நகரமண்டபங்கள், மாநகர சபைகள், பாராளுமன்றங்கள் போன்றவற்றிற்கும் நேரில் சென்று தமிழ்மக்களின் பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழ் மக்களின் பிரச்சினைகள், இன்றைய நிலை தொடர்பாக உருவாக்கப்பட்ட சிறிய கையேட்டையும் கையளித்துள்ளதுடன் தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயத் தன்மையையும் விளக்கியுள்ளார்.
ஊடகங்களுக்கும் அவர் நேர்காணல்களை வழங்கியுள்ளார்.இதேவேளை, கடந்த 08.09.2018 சனிக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளான Aulnay-sous-Bois, Cergy, Colombes, La Courneuve ஆகிய நகரங்களில் இடம்பெற்ற வருடாந்த ஒன்று கூடல்களில் (FORUM) அந்தப் பகுதிகளின் தமிழ்ச்சங்கத்தினருடன் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டு வெளிநாட்டவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன், பதாதைகளை வைத்து விளக்கமளித்ததுடன், குறித்த பகுதிகளின் நகரபிதா மற்றும் உறுப்பினர்களுடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டு, எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அப்பொது வெளிநாட்டவர்கள் பலரும் எமது தமிழ் மக்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் உள்ளனவா? எனக்கேட்டு ஆதங்கப்பட்டுள்ளனர். அனைத்து மக்களும் இலகுவில் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு அங்கே செயற்பாடுகள், சாதனங்கள், ஒளிப்படங்கள, விளக்கக் கையேடுகள்; என்பவற்றைக்கொண்டு இளையோர்கள் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
15.09.2018 சனிக்கிழமை சேர்ஜி பகுதியில் இடம்பெற்ற தியாகதீபம் லெப் .கேணர் தீலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் இணைந்துகொண்டு, தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட காணொளியினை காட்சிப்படுத்தியதுடன், இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்கள் தமது செயற்பாடுகள் குறித்து உரைநிகழ்த்தியுள்ளனர். அங்கு பல மாணவர்களும், இளையோரும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.
தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுள் அனைவருக்கும் ஏற்றவகையிலான 11 சிந்தனைகளை எடுத்து அதனை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து தினம் ஒரு சிந்தனையாக வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இளையோர் தெரிவிக்கையில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தொடர்பில் வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் தவறான கருத்தை இல்லாதுசெய்வதே தமது நோக்க மெனவும், எமது தலைவர் இவ்வாறான சிந்தனைகளைத்தான் தன்னகத்தே கொண்டுள்ளார் என்பதையும் வெளிக்கொணர்வதற்காகவே தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைகளை பிரெஞ்சு மொழியில் தாம் மொழிபெயர்த்திருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
17.09.2018 திங்கட்கிழமை ஜெனிவா பொங்குதமிழ் அரங்கில் பிரெஞ்சு இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி மகேஸ்வரன் பானுஜா அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் எமது மக்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் எமது மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.
24.09.2018 திங்கட்கிழமை ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் (Side Event) பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவர் கலந்துகொண்டுள்ளனர். அங்கே பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் வெளியிடப்பட்ட இரண்டாவது காணொளியும் ஆங்கில உபதலைப்புடன் திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கே பிரான்சு இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் செல்வன் நவநீதன் நிந்துலன் அவர்கள் 10 நிமிடங்கள் உரையாற்றியிருந்தார். இதுவரை ஐக்கியநாடுகள் சபை கண்டுகொள்ளாத பிரச்சினைகள் குறித்ததாகவும் நில ஆக்கிரமிப்பு, சர்வதேச விசாரணை போன்றவற்றை உள்ளடக்கியதாக அவரது பிரெஞ்சு மொழி உரை அமைந்திருந்தது. அதனை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பும் செய்திருந்தார்கள். .09.009 சனிக்கிழமை பொண்டிப் பகுதியில் பிரான்சின் பல பகுதிகளிலும் உள்ள தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான ஒரு செயலமர்வு இடம்பெற்றுள்ளது. அது இரு பிரிவுகளாக இடம்பெற்றுள்ளது. முதல் பிரிவில் இளையோருக்குப் புரியும் வகையில் எமது தமிழ் மக்களின் வரலாறு அனைவருக்கும் புரியும்வகையில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் அகிம்சை வழிப்போராட்டங்கள், ஆயுதவழிப்போராட்டங்கள் என்ற வகையில் தெளிவுபடுத்தப்பட்டது.
இரண்டாவது பிரிவில் தமிழீழம், அதாவது தமிழீழம் என்பது கனவல்ல அது சாத்தியமான ஒன்றே, தமிழீழ விடுதலை, மக்கள் இன்று விடுதலை அடையாமல் அடக்குமுறையின் கீழ் வாழ்கின்றமை தொடர்பிலும், தற்போதைய போராட்டங்கள், ஐ.நா. வுக்கு ஊடாக இடம்பெறும் போராட்டங்கள், ஏனைய வழிகளுக்கு ஊடாக இடம்பெறும் போராட்டங்கள் என்பன பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன், இளையோரை குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கூடாக எமது நாட்டு விடுதலைக்கு எவ்வாறான புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று ஆராயப்பட்டது. பலரும் பல புதிய சிந்தனைகளை முன்வைத்தமையைக் காணமுடிந்தது. அன்றைய பொழுது அனைவருக்கும் சிறப்பானதாக அமைந்திருந்தது. இவ்வாறான செயலமர்வுகளை தாம் மேலும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தனர். சில இளைஞர்கள் எமக்கு இவ்வளவு பிரச்சினைகள் இடம்பெற்றிருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் வினவியதையும் காணமுடிந்தது.
30.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக திபம் லெப்.கேணல் திலிபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு மற்றும் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நிகழ்வில் பிரான்சு இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் நவநீதன் நிந்துலன், செல்வி மகேஸ்வரன் பானுஜா ஆகியோர் உரை நிகழ்த்தியிருந்தனர். தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் தியாகப் போராட்டம் தொடர்பாகவும் அவர் முன்வைத்த 5 அம்சக்கோரிக்கைகள் தொடர்பாகவும் அவர்களுடைய உரை அமைந்திருந்தது.
தொடர்ந்து இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடப்போவதாக பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)