தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது பேரினவாத இராணுவ அடக்குமுறையே- மனோ

290 0

சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரவில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

கொழும்பு டவர் அரங்கில் நேற்று நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்கள் விடுதலை முன்னணியைப் போன்று விடுதலை புலிகள் இயக்கமும் இலங்கை மண்ணில் செயற்பட்ட ஒரு அரசியல் இயக்கம். அரசுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியினால் இந்த இரண்டு இயக்கங்களும் ஈடுபட்டு, இரண்டும் தடை செய்யப்பட்டன.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி மீதான தடை நீக்கப்பட்டு அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் வந்து ஜனநாயகம் பற்றி எங்களுக்கு வகுப்பு எடுக்கின்றார்கள்.

எனினும் யுத்தம் முடிவடைந்து முடிந்து பத்து வருடங்கள் ஆன நிலையில், புலிகளை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். புலிகள் இயக்கத்திலிருந்து போராடியவர்கள் என்று 12,000 க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் நம் நாட்டில் இன்று வாழ்கின்றனர்.  அவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுகிறார்கள். பலருக்கு கை, கால்கள், அவயவங்கள் இல்லை.

“தாங்கள் தான் புலிகள்” என்று கூறி புலம்பெயந்த நாடுகளில் வாழும் சில குழுக்களை விட, இந்நாட்டில் இன்று வாழும் இந்த முன்னாள் போராளிகளுக்கு தான் இந்த தார்மீக உரிமை இருக்கிறது. ஆகவே இவர்களது ஆயிரக்கணக்கான, வாக்குமூலங்களை, சத்திய  கடதாசிகளை, நமது சட்டத்தரணி தலைவர்கள் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கலாமே!

தமிழ் இளைஞர்களை அன்று ஆயுதம் தூக்க வைத்தது, தமிழ் இளைஞர்களது மனநோய் அல்ல. அதன் காரணம், பேரினவாத இராணுவ அடக்குமுறையே ஆகும். இது வரலாற்று உண்மை. ஆனால், இவற்றின் அர்த்தம், புலிகள் பிழையே செய்யாத, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, அணியினர் என்பது அல்ல. தமிழுலகில் மட்டுமல்ல, முழு உலகிலும் அப்படி யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

இன்று புலிகளை மீண்டும் உயிர்பிக்க சொல்லிவிட்டார் என்று விஜயகலா மகஸே்வரனை வைத்து சட்டம் இறுக்குகிறது. உண்மையில் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதால், அதை மீண்டும் உயிர்பிக்க சொல்வது சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரலாம். அது தொடர்பில், உலகின் பல நாடுகளில் நடப்பது போல் இலங்கை நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம். சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ் தேசியவாத தலைவர்கள், அதை ஏன் இன்னமும் செய்யாமல் இருக்கிறார்கள்? இப்போது தேர்தல் காலம் நெருங்க நெருங்க திடீரென பல தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசிய புலிகளை பற்றி அடிக்கடி பேசுவதை ஊடகங்களில் பார்க்கிறோம் என்றார்.

Leave a comment