கவர்னர் பேச்சால் ஏதோ ஒன்று நடக்க போகிறது என்றும், நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்றும் துரைமுருகன் கூறினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை எழுதி கொடுத்து நீக்க சொன்னாலும் நீக்காமல் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இந்த பணியை செய்யும் அதிகாரிகள் சோம்பேறிகளாக இருக்க வேண்டும் அல்லது செத்தவர்கள் பெயரில் ஓட்டு போடுவதற்கு யாராவது பின்புலமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு காரணத்தை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை மற்ற மாநில தேர்தல் அறிவிப்புடன் சேர்த்து நடத்துவார்கள் என எதிர்பார்தேன். ஆனால் தேர்தல் இப்போது இல்லை என்று சொல்லி விட்டார்கள். நம்ம ஊரில் வராத மழைக்கே ரெட் அலர்ட் கொடுப்பார்கள், வராத மழைக்கு தேர்தலை தள்ளி வைக்க சொல்வார்கள். என்னுடைய கணக்கு ஏதோ ஒன்று நடக்க போகிறது. காரணம், இதற்கு முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்யும் போதும், அம்பேத்கர் சட்ட கல்லூரியில் நடந்த நியமனத்தின் போதும், எங்கிருந்தோ 2 பேரை நியமித்தார்கள். அதற்கு இப்போது கவர்னர் விளக்கம் அளிக்கிறார்.
துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டது என்று அப்போதே கவர்னர் சொல்லியிருக்கலாம். அந்த நேரத்தில் இந்த ஆட்சியை கவர்னர் பாராட்டி பேசினார். ஊர் ஊராக சென்று குப்பை அள்ளினார். இப்போது திடீரென்று அவர் சொல்வது ஏன்?. கவர்னர் இதை கூறியிருப்பதை வைத்து பார்க்கும்போது, என் அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். எங்கேயோ உதைக்கிறது. எங்கேயோ விடிவதற்கு முன்பு சேவல் கூவுவது போல், கவர்னர் இப்போது கூறுவதால், இதை வைத்து சில விஷயங்கள் நடக்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபை தேர்தல் வரலாம். வேறு எதுவும் நடக்கலாம். ஆனால் இந்த ஆட்சி நாடாளுமன்ற தேர்தலை தாண்டி செல்லாது. கவர்னரின் சூட்சுமம் என்ன என்பது விரைவில் தெரியும். எங்களை பொறுத்தவரையில் தேர்தல் எப்போது வந்தாலும், சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.