காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கவர்னர் ஆட்சி நடந்து வரும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட 149 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்களுக்காக 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு முதல்முறையாக மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பதை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
இதனால் தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் ஜம்மு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள 26 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் அனைவரும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், எனவே மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.