எதிர்வரும் 24ஆம் திகதி யாழ். முற்றவெளியில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் மக்களெழுச்சி தொடர்பில் அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது. 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் வடக்கில் இடம்பெறும் மிக முக்கியமா
னதொரு மக்கள் நிகழ்வாகவே மேற்படி எழுக தமிழ் நோக்கப்படுகிறது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்விற்கு வடக்கிலுள்ள ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தொடங்கி சிகை அலங்கரிப்பாளர் சங்கம் வரையில் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறு மக்கள் அமைப்புக்கள் பலவும் ஒரு மக்களெழுச்சிக்கு ஆதரவு தொிவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். இறுதியாக பொங்கு தமிழ் நிகழ்விற்கே வடக்கின் மக்கள் அமைப்புக்கள் அனைத்தும் இவ்வாறானதொரு ஆதரவை வழங்கியிருந்தன.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் நான்கு கோரிக்கைகளின் அடிப்ப
டையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அவையாவன, தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமித்து நின்று, அதன் தனித்துவத்தை அழிக்கும் வேலைத்திட்டங்களில் பங்கேற்று பாதுகாப்புமளிக்கும் அரச பாதுகாப்பு படைகள் எமது மண்ணிலி
ருந்து அகற்றப்பட வேண்டும், கடந்த முப்பது வருடங்களாக எமது மக்கள் நடுத்தெருவில் நிற்க அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் அரசபடைகள் உடனடியாக அவற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த நிலங்கள் எமது மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும், இறுதி யுத்
தத்தின் போதும் அதற்கு முன்னரும் பின்னரும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் எங்கிருக்கின்றனர் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறி
யப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி உடன் விடுவிக்கப்பட வேண்டும், யுத்தக் குற்றங்கள் இனவழிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். மேற்படி ஐந்து கோரிக்கைகளின் அடிப்படையிலேயே எழுக தமிழில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இவை நியாயமான கோரிக்கைகள், இவற்றை முன்னிறுத்தி அணிதிரள்வதற்கும் குரல் கொடுப்ப
தற்கும் தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு என்பதை ஏற்றுக்கொண்ட கட்சிகளும் சிவில் அமைப்புக்
களும் எழுக தமிழுக்காக ஒன்றிணைந்திருக்கின்றன. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்ட
மைப்பின் அங்கத்துவக் கட்சிகளான சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள்
முன்னணி ஆகிய பிரதான தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் இந்நிகழ்விற்காக ஒன்றுபட்டிருக்கின்றன.
ஏனையோரையும் விலகி நிற்காது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அணிதிரளுமாறும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
எழுக தமிழ் எழுச்சி நிகழ்விற்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அதனை குழப்புவதற்கான பல்வேறு முயற்சிகளும் திரைமறைவில் இடம்பெற்று வந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்
புலத்தில்தான் ஆரம்பத்தில் இதுபோன்ற எழுச்சி நிகழ்வுகள் அவசியம் என்பதை வலியுறுத்திவந்த தமிழரசு கட்சி திடீரென இதில் பங்குகொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.
ஒரு தனிக் கட்சியாக இருந்த போதும், தமிழரசு கட்சியின் முடிவுகளை தாண்டிச் செல்லுமாற்
றலற்ற தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) இந்நிகழ்வுக்கான ஆதரவை வழங்கவில்லை. இத்
தனைக்கும் ரெலோவின் தலைவர்கள் சிலர் ஜெனிவாவில் போய் போராடுவதாக அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தவர்கள். குறிப்பாக சிவாஜிலிங்கம் போன்றவர்கள்.
ஆனால் தங்களுக்கு அருகில் நடக்கும் ஒரு மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவிக்க முடியாதவர்க
ளாகவே இருப்பதும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் இந்தளவு அரசாங்கத்தை எதிர்க்க இவர்கள் பயப்படுகின்றனர் அல்லது அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஆசனம் கிடைக்காது என்னும் பயமா? இதே தினத்தில் நாங்கள் விட்டில்கள் அல்ல என்னும் தலைப்பிலான கவிதை நூல் நிகழ்வொன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனா
தியும் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளுக்காக அணிதிரண்டு தங்களின் கோரிக்கைகளை அரசாங்கத்
திற்கும் சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்ல முற்படுகின்ற ஒரு தினத்தில் சம்பந்தனும் மாவையும் கவிதை நூல் நிகழ்வொன்றில் பங்குகொள்ளுகின்றனர் என்பது எந்தளவிற்கு அவர்கள் மக்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பதற்கான சான்றாகும்.
உண்மையில் தமிழரசுக் கட்சி இதனை எதிர்த்து நிற்பதற்கு ஒரு நியாயமான காரணமும் இல்லை. ஏனெனில் கடந்த பாராளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் முன்வைக்கப்
பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகளைத்தான் தமிழ் மக்கள் பேரவையும் முன்வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதனை ஆதரிப்பதற்கான காரணம்.
ஒரு வேளை கூட்டமைப்பின் கொள்கை நிலைப்பாட்டிற்கு முரண்பாடான விடயங்கள் இருந்தி
ருந்தால் அவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார்கள். அவர்கள் மட்டுமன்றி கூட்ட
மைப்பை ஆதரித்து நிற்கும் பல புத்திஜீவிகள், அரசியல் சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இதனை ஆதரித்து நிற்பதற்கான காரணமும் அதுவே.
நிலைமை அவ்வாறிருக்க, தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கே தமிழரசு கட்சி எதிராக நிற்பது அவ்வாறான புத்திஜீவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இத்தனைக்கும் அவ்வப்போது போராடப் போவதாக அறிக்கைகள் விட்டவரான மாவை சேனாதிராஜா உண்மையிலேயே அவ்வாறானதொரு மக்கள் எழுச்சிக்கான ஏற்பாடுகள் இடம்பெற்
றுவருகின்ற இவ்வாறானதொரு சூழலில், அதற்கு எதிராக நிற்பது விந்தையிலும் விந்தையாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறானால் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட கோசங்
களும் போராட்டத்திற்கான அறைகூவல்களும் வெறும் வாக்கு சேகரிப்பதற்காக சொல்லப்பட்ட
வைகளா? தமிழரசு கட்சியின் இளக்காரமான இத்தகைய செயற்பாடு மிகவும் ஏமாற்றமளிப்பதா
கவே பலரும் கருதுகின்றனர்.
இவ்வாறான கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும் போராட்டத்தை நடத்துவதன் மூலம் தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல்தீர்வுக்கான நடவடிக்கைகளில் பின்னேற்றம் ஏற்படலாம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கருதுவதாக தெரிகின்றது.
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அரசியல் தீர்வொன்றை பெறுவதற்கான சந்தர்ப்பம் கைகூடியுள்ள நிலையில் அதனை குழப்பாது சிறிது காலத்துக்காவது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து முயற்சிசெய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைமை நிற்பதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.
ஆனாலும் அழுத்தமொன்றை கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் காண்பிக்கக் கூடிய நிலை உருவாகும்.
இந்த நிகழ்வில் அதிகளவான மக்கள் திரண்டுவிடக் கூடாதென்று அரசாங்கத் தரப்புக்களும் விரும்
புவதாகவே தகவல்கள் கசிந்திருக்கின்றன.
ஏனெனில் தமிழ் மக்கள் தங்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை கைவிட்டுவிட்
டனர், அவர்கள் தாங்கள் முன்வைக்கும் ஒரு தீர்வை (அரைகுறையான) ஏற்றுக் கொள்வார்கள் என்று அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகின்ற சூழலில்தான் இவ்வாறானதொரு எழுச்சி ஏற்பாடாகியிருக்கிறது.
எனவே, எவ்வாறாயினும் இதில் அதிகளவு மக்கள் கலந்துகொள்ளாது பார்த்துக் கொண்டால் தங்
களின் அரசியல் நிலைப்பாட்டை சரியென்று நிரூபிக்க முடியுமென்றே அரசாங்கம் கருதுகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஆரம்பத்தில் இதுபோன்ற நிர்ப்பந்திக்கும் நிகழ்வுகள் அவ
சியம் என்பதை வலியுறுத்தி வந்த தமிழரசு கட்சி தற்போது இதனை எதிர்த்து நிற்கிறது. உண்
மையில் இது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான ஒரு செயற்பாடாகும்.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் கூட அரசாங்கம் சிங்கள மயமாக்கல் நிகழ்சித்திட்டத்தை நிறுத்த
வில்லை. சிங்கள தேசத்தின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருந்த சர்வதேச அழுத்தங்களிலி
ருந்து தப்புவதற்காக எங்களின் வாக்குகளை பயன்படுத்திக் கொண்டு, இன்று மீண்டும் தன்னுடைய ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்து விட்டது.
இவ்வாறானதொரு சூழலில் தமிழ் தலைமைகள் தொடர்ந்தும் அமைதியாக இருப்பார்களாக இருந்தால் அது மறைமுகமாக அரசாங்கம் செய்வதையெல்லாம் ஏற்றுக்கொள்வதாகவே பொருள் கொள்ளப்படும்.
சரியான தருணத்தில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள்தான் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கப் பயன்படும் என்னும் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறும் எழுக தமிழை முக்கிய அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத் தலைவர்களும் மதத்தலைவர்களும் ஆதரித்து நிற்கின்றனர்.
எழுக தமிழில் தங்களை தமிழர்களாக உணரும் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அணிதிரள்வர் என்பதே இதனை ஏற்பாடு செய்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அவர்களின் நம்பிக்கையின் வெற்றி என்பது மக்களின் வெற்றியாகும்.
திலீபன்