சிலை கடத்தல் வழக்கு – தொழில் அதிபரின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை

251 0

சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 2 கல் தூண்களை தோண்டி எடுத்தார்கள்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசிப்பவர், தொழில் அதிபர் ரன்வீர்ஷா. இவரது வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பழமையான சிலைகள், கலை நயமிக்க கல்தூண்கள் உள்பட 91 கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் ‘சம்மன்’ அனுப்பினார்கள். அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடாமல் தடுக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உஷார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் ரன்வீர்ஷாவின் புகைப்படத்துடன் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

தன்னை கைது செய்யாமல் இருக்க தொழில் அதிபர் ரன்வீர்ஷா சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சம்மன் அனுப்பப்பட்ட ரன்வீர்ஷா சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராவார் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி ரன்வீர்ஷா நேரில் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டார். ஆனால் கால அவகாசம் கொடுக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் உள்ள ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகை ஒன்றில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த விருந்தினர் மாளிகையில் ரன்வீர்ஷாவுக்கு ஒரு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே ஏராளமான சிலைகள் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

அங்கு 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டினார்கள். அங்கு 2 கலைநயமிக்க கல்தூண்கள் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் வெளியே எடுத்தனர். அதில் ஒரு கல்தூண் சிலையோடு சேர்ந்து காணப்பட்டது. மேலும் அங்கு பூமிக்கடியில் ஏராளமான சிலைகளை புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் தோண்டு பணியில் போலீசார் இன்று(சனிக் கிழமை) ஈடுபடுகிறார்கள்.

Leave a comment