மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்த விளக்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டாரெனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, புதிய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் இடம்பெற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்குபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துரைத்த அவர், “சுதந்திரக் கட்சியை தவிர மற்றைய அனைத்துக் கட்சிகளும், மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனவென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். கலப்பு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வாக்குறுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரகடனத்திலும், இதே விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அதற்கமையவே, உள்ளூராட்சித் தேர்தலை, புதிய கலப்பு முறையில் நடத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவும், நாடாளுமன்றத் தேர்தலையும் கலப்பு முறையில் நடத்த வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.