இடைக்கால அரசாங்கம்?

345 0

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்காக, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யப் போவதாகச் சூளுரைத்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணி, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உதவியோடு, இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராகக் கொண்டதாக இவ்வரசாங்கம் அமையுமென, அவ்வணியினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட, அவ்வணியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்கவே, இக்கருத்தை வெளியிட்டார்.

தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட, நாட்டிலுள்ள அனைத்து முற்போக்குப் பிரிவுகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினரும், ஐ.தே.கவின் கொள்கைகள் தொடர்பாக ஏமாற்றமும் திருப்தியின்மையும் அடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், அவர்கள் அனைவரும், புதிய இடைக்கால அரசாங்கத்துக்கு அழைக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் முன்னிலையான கட்சியாக, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்படும் என அவர் குறிப்பிட்டார்.  மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியினர், பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றால், தங்களுடைய நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளனரே என்று சுட்டிக்காட்டப்பட்ட போது, புதிய இடைக்கால அரசாங்கம், ஜனாதிபதியின் தலைமையின் கீழ், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராகக் கொண்டு அமைக்கப்படும் என்பதால், அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என, எஸ்.பி. திஸாநாயக்க பதிலளித்தார்.

“பொருளாதாரம் அழிவடைகிறது. ஏற்றுமதிகள் குறைவடைந்துள்ளன. ரூபாய், தினமும் சரிந்துகொண்டிருக்கிறது. அனைத்துப் பொருட்களின் விலைகளும், கட்டுப்பாடின்றி உயர்ந்து கொண்டிருக்கின்றன. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மாத்திரமன்றி, கீழ் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களும், தமது நாளாந்த வாழ்க்கையை நடத்திச் செல்லக் கஷ்டப்படுகின்றன. இந்த நிலைமைக்கு நாம் முடிவு வழங்கி, மக்களுக்குச் சிறிது நிவாரணத்தை வழங்குவோம்” என்று அவர் தெரிவித்தார்.

தினேஷ் குணவர்தன தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரிகள், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதிரு ஹெல உறுமய, ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு, இன்னும் பல முஸ்லிம், தமிழ் கட்சிகள், தமக்கு ஆதரவாக உள்ளன என அவர் தெரிவித்தார். ஆனால், ஏனைய முஸ்லிம், தமிழ் கட்சிகளை அவர் பெயரிட்டிருக்கவில்லை.

 

 

Leave a comment