ஆவா குழு என்பது, பயங்கரவாதக் குழு அல்ல எனத் தெரிவித்த சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின் பண்டார, சிலர் தவறான கண்ணோட்டத்தில் அக்குழுவை நோக்குகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஆவா குழு, பொலிஸார் மீதோ அல்லது அரசியல்வாதிகள் மீதோ, தாக்குதல் நடத்தவில்லை எனவும், எனவே, பாரதூரமான ஒன்றாக அக்குழுவைக் கருத வேண்டாம் எனக் குறிப்பிட்டார்.
ஆவா குழுவினருக்கு எதிராக, பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்த அவர், அக்குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப் -படுத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இனி ஒரு போதும் நாட்டில் யுத்தம் ஏற்படாது. வடக்கு மக்கள், தற்போது யுத்த நிறைவுக்குப் பின்னர் சுதந்திரமாக வாழ்கின்றனர். தென்பகுதியுடன் ஒப்பிடுகையில், வடக்கில் குற்றச்செயல்கள் குறைவு. இந்த வருடத்தை எடுத்துக்கொண்டால், வடக்கில் 2 கொலைச் சம்பவங்களே பதிவாகியுள்ளன. வடக்கில் சுமூகமாக நிலையே காணப்படுகின்றது.
“எனினும் சிலர், வடக்கில் சிறிய சிறிய சம்பவங்கள் இடம்பெற்றவுடன், புலிகள் மீண்டும் தலை தூக்குகிறார்கள்; பயங்கரவாதம் மீண்டும் தலைதுக்குகிறது என்றே கூறுகின்றனர்” என குறிப்பிட்டார்.