மாகாணசபை தேர்தலை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தயக்கம் காட்டுகின்றது. ஏனைய பிரதான கட்சிகள் அனைத்தும் தயார் நிலையிலேயே இருக்கின்றன என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் காலம் கடந்து செல்வது தொடர்பாக அவரிடம் கருத்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:-
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தில் நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என தம்மிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன எனவும் எந்நேரத்திலும் தாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலைபாட்டையே குறிப்பாக சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் கொண்டுள்ளன.
எந்த நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனைச் சந்திக்க ஐக்கிய தேசிய கட்சி, கூட்டு எதிர்கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகள் தயார் நிலையில் உள்ளன.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே தயக்கம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே மாகாண சபை தேர்தல் காலம் கடந்தப்படுகின்றது என எண்ணத் தோண்றுகின்றது.
நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமக்கான வெற்றி வாய்ப்பு சிறப்பானதாக அமைய மாட்டாது என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐயமே மாகாண சபை தேர்தல் தள்ளிப்போகக் காரணமாக அமைகின்றது என்பதை திட்டவட்டமாக கூற முடிகிறது. எது எப்படியிருப்பினும் இனியும் காலம் தாழ்த்தாது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும் என்றார்.