தென்மேற்கு பருவ மழை காலம் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் வட கிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.
இதற்கிடையே, இலங்கை அருகே வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவை யொட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், சேலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக தூறியது.
இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக 7-ந்தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதாவது 7-ந்தேதிக்கு ரெட் ‘அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது:-
இலங்கை அருகே தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்யும்.
5-ந்தேதி (இன்று) தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்தழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது 36 மணி நேரத்தில் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், பின்னர் அது புயலாக மாறி ஓமன் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 7-ந்தேதி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். அன்று காலை 8.30 மணி முதல் 8-ந்தேதி காலை 8.30 மணி வரை சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் ‘ரெட் அலர்ட்’ எனப்படும் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது.
எனவே கன்னியாகுமரி, கேரளாவின் தெற்கு பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்றவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நேரங்களில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ. மழை பெய்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் 10 செ.மீ., வேதாரண்யம், சீர்காழி தலா 9 செ.மீ., ராமேசுவரம் 8 செ.மீ., கடலூர், பாம்பன், திருக்காட்டுப்பள்ளி, ஜெயங்கொண்டம், சேத்தியாதோப்பு, புதுச்சேரி, திருமானூர், மயிலாடுதுறை, 7 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது. மேலும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக கூடுதல் தலைமைச்செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்த முன்னெச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து உள்ளது.
‘ரெட் அலர்ட்’ அறிவிப்பை தொடர்ந்து தயார் நிலையில் இருக்குமாறும், போதிய நிவாரண முகாம்களை அமைக்குமாறும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் அங்குள்ள நிலவரத்தை பொறுத்து முடிவு எடுப்பார்கள்.
தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்த நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள நீர்மட்டத்தின் அளவை பொறுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் ‘உஷார்’ நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.