துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரூ.36 லட்சம் தங்கம் கடத்தியவர் கைது

360 0

துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரகசிய அறை அமைத்து, அதில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரகசிய அறை அமைத்து, அதில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது துபாயில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு வந்து, அங்கிருந்து சென்னை வரும் உள்நாட்டு விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவர்கள், மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்தூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆரிப்(வயது 40) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர்.

அவரிடம் இருந்த சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, அதில் ரகசிய அறை அமைத்து அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அதில் சிறியது, பெரியது என 14 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார்.

இந்த தங்க கட்டிகளை அவர் யாருக்காக துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எனவும் கைதான முகமது ஆரிப்பிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment