எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அல்லது அதன் நீட்சியைப் பேணுவது தொடர்பிலான முனைப்புக்களில் ஒன்றாக எழுக தமிழைக் கருதுபவர்கள்; அதன் ஆதரவாளர்களாகவும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான காலத்தில் தற்காலிகமாகத் தோற்றம்பெற்ற அரசியல் ஒழுங்கிற்கு ஒட்டுமொத்தமாக இசைவடைந்தவர்கள் எழுக தமிழின் அதிருப்தியாளர்களாகவும் மாறி உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு பெரும் தரப்போ எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
இவை தவிர்த்து, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தமது ஆதிக்கத்தை கைப்பற்றுவது தொடர்பிலான இழுபறிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்ற மூன்று தரப்புக்களுக்கிடையிலும் ‘எழுத தமிழ்’ சில சிக்கலான உணர்வு நிலையை தோற்றுவித்திருக்கின்றது. இந்த மூன்று தரப்புக்குள், முதலாவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியும், இரண்டாவதாக தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், மூன்றாவதாக புத்திஜீவிகள் குழாமொன்றும்- அதனோடு ஒத்திசையும் ஊடக செயற்பாட்டார்கள் சிலரும் அடங்குகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பலகட்சிகளின் கூட்டமைப்பு என்கிற தேர்தல் கால முன்வைப்பினை மக்கள் ஏற்றுக் கொண்டாலும், இன்னொரு பக்கம் அதன் முடிவெடுக்கும் அதிகாரத்தினை கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாகவே தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையுமே வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற தேர்தல் கால அடையாளத்துக்குள், தேர்தல் காலம் தவிர்ந்த அனைத்துக் காலங்களிலும் அதிகாரம் செலுத்துவது தமிழரசுக் கட்சி என்கிற தனிக்கட்சியே ஆகும். இப்படியான நிலையில், ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தங்களது அதிகார எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்வது அல்லது நீக்கப்பட்ட எல்லைகளை புதிதாக வரையறுத்து அடைவது தொடர்பில் பெரும் ஆர்வமொன்று ஏற்பட்டிருக்கின்றது. இப்படியான சிக்கலான சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளின் விளைவாகவும் ‘எழுத தமிழ்’ தோற்றம் பெற்றிருப்பதைக் கொள்ள முடியும்.
இயல்பாகவே, தேர்தல்களில் அதிக ஆதரவினைப் பெற்ற தரப்புக்களுக்கு தமக்கு அழுத்தத்தினை ஏற்படுத்தும் அரசியல் செயற்திட்டங்கள் தோற்றம் பெறுவதை எதிர்கொள்வது தொடர்பில் ஒவ்வாமை உண்டு. அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடையாளத்துக்குள் ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக் கட்சிக்கும் உண்டு. அது, தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உண்டு. அதற்கு முன்னர் ஒன்றிரண்டாக இணைந்து அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த சிவில் சமூக அமைப்புக்கள் சார்ந்தும் இருந்தது. இப்போது, எழுக தமிழ் தொடர்பிலும் உண்டு.
ஏனெனில், எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அது சில விடயங்களைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். வெற்றியடைந்தால் புதிய ஒருங்கிணைவுகளும் அரசியல் போராட்டங்களும் இன்னும் இன்னும் தோற்றம் பெறும். தோல்வியடைந்தால் புதிய வழிகளுக்கான மூர்க்கமான தேடல்கள் ஆரம்பிக்கும். அது, சிலவேளை ஒட்டுமொத்தமாக மக்கள் போராட்டங்களுக்கான வெளியைப் புதிய வடிவில் திறக்கலாம். அதாவது, கட்சிகள், பொது அமைப்புக்களின் தலையீடுகள் அற்ற ரீதியிலான மக்கள் ஒருங்கிணைவுகள். இவை தாண்டி இன்னொரு விடயமும் சாத்தியப்படலாம். அது, தமிழ்த் தேசிய உரையாடல்களிலிருந்து மக்களை ஒட்டுமொத்தமாகச் சலிப்படைந்தவர்களாக மாற்றி, ஒதுங்கிப்போகும் தரப்புக்களாக உருவாக்கிவிடும். அது, தமிழ்த் தேசியப் பரப்பில் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் அனைத்துத் தரப்புக்களின் தோல்வியாகவும் மாறும்.
எது எவ்வாறாக இருப்பினும், தம்முடைய அரசியல் நிலைப்பாடுகளின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் அணியொன்றின் பின்னால், தேர்தல்கள் தவிர்ந்த காலத்தில் மக்கள் ஒருங்கிணைந்தாலும் தமிழரசுக் கட்சியின் தனித்துவம் மீதான கௌரவக் குறைவாக மாறும். அதனை, அதன் தலைவர்கள் இரசிக்க மாட்டார்கள். அதன் வெளிப்பாடுகளையே கடந்த நாட்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள். இயல்பான அரசியல் சூழ்நிலைகளை குழப்புகின்ற செயற்திட்டங்கள் அரசியல் தீர்வொன்றினை அடையும் இலக்கினை சிதைத்துவிடும் வல்லமை பெற்றவை என்கிற தோரணையிலான பதிலொன்றை ‘எழுக தமிழ்’ பேரணி பற்றிய கேள்வியொன்றுக்கு எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் வழங்கியிருக்கின்றார்.
அதாவது, எழுக தமிழ் வடக்கிலும் கிழக்கிலும் வெற்றி பெற்றால், அது தென்னிலங்கையில் பதற்றத்தை உண்டு பண்ணும். அதனால், அரசியல் தீர்வுத் திட்டம் குழப்பமடையலாம் என்பதாகும். இது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருந்தாலும், மீள் எழுச்சி தொடர்பில் சிந்திக்க வேண்டிய இனமொன்றின் அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலானது. ஏனெனில், தமது அரசியல் சுதந்திரம் – இலக்கு பற்றி, போராடும் இனமொன்று தொடர்ச்சியான போராட்ட மனநிலையில் இருக்க வேண்டிய தேவையுண்டு. அதுவும், தமிழ் மக்களின் வன்வலு போராட்டமான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான காலத்தில், அஹிம்சை வழியிலான போராட்டங்களை தோற்றம் பெற வைக்க வேண்டியது அவசியமானது. அது, தெற்கின் நிகழ்ச்சி நிரலின் போக்கில் ஒழுகும் விடயங்களைப் பல நேரங்களில் ஏறிக் கடந்தாக வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்தும். அப்போது, அதனைக் கடந்துதான் ஆக வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது, அதிகளவான போராட்டங்கள் இடம்பெறும் என்று தான் எதிர்பார்த்தாலும், ஒப்பீட்டளவில் ஒரு சில போராட்டங்களே இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அவர், தெற்கில் மஹிந்த அணியின் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களையும், வடக்கில் கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நீதி கோரும் போராட்டங்களையுமே கருத்தில் கொண்டிருந்தார். ஆனால், அந்தப் போராட்டங்கள் ஒப்பீட்டளவில் அல்ல; ஒட்டுமொத்தமாகவே ஒன்றிரண்டு என்கிற அளவிலேயே நடத்தப்பட்டிருந்தன. அது, அரசாங்கத்துக்கு பெரும் நன்மதிப்பைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருந்தது. ஆனால், அது தமிழ்த் தேசிய அரசியலுக்கு பெரும் பங்களிக்கும் நிலையென்று கொள்ளவேண்டியதில்லை. மாறாக, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களை உள்வாங்கி தூங்கும் செயற்திட்டங்களுக்கு ஒப்பானது. ஆக, தெற்கில் இனவாதிகள் பொங்குவார்கள் என்பதற்காக, நியாயமான கோரிக்கைகள் சார்ந்து வடக்கு- கிழக்கில் போராட்டங்கள் தோற்றம் பெறக் கூடாது என்பது ஏற்புடையது அல்ல.
இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தாலும் அதிகாரம் இழந்தவர்களும், அதிகாரத்தின் எல்லைகளைத் தக்க வைக்கப் போராடுகின்ற தரப்புக்களும் தமிழ் மக்கள் பேரவைக்குள் அங்கம் வகித்துக் கொண்டு, அதனைத் தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக கையாளுவதும் ஏற்புடையது அல்ல. இங்கு எந்தவொரு கட்சிக்கும், தனி நபருக்கும் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் முடிவுகளை எடுக்கும் உரிமை உண்டு. ஆனால். அது ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் அரசியலை படுகுழிகளை நோக்கிய நகர்த்தினால் அதுதொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டிய அவசியத்தை வழங்குகின்றது. இந்தப் பத்தியாளர், ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்கு முன்னர் ‘எழுக தமிழ்’ பற்றி எழுதிய பத்தியில், தமிழ் மக்களின் போராட்டங்களை மீளவும் ஒருங்கிணைக்கும் போக்கில் எழுக தமிழ் வரவேற்கப்பட வேண்டியது என்று எழுதியிருக்கின்றார். அது, ஆமை வேகப் பயணமாக அமைந்தாலும் வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றிருக்கின்றார்.
ஆனால், தனிப்பட்ட சுயலாப அரசியல் கட்சிகள் அல்லது தலைமைகள் எழுக தமிழைத் தம்முடைய சுய உயர்வுக்காக பயன்படுத்திக் கொள்வார்களாக இருந்தால், அது எதிர்கால போராட்டங்கள் தோற்றம் பெறுவதை தடுக்கும்; மக்கள் ஏமாற்றம் அடைவார்கள். அது, தமிழ்த்தேசிய அரசியல் மீதான எரிச்சலாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. குறிப்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இது தொடர்பில் மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும்.
இன்னொரு புறம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்குள்ளேயே தொடர்ச்சியாக இருந்து வரும் புத்திஜீவிகள் குழாமொன்றும் – அது சார் ஊடகவியலாளர்கள் சிலரும், எழுக தமிழ் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுவிடக் கூடாது என்று உள்ளூர பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில், தேர்தல் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், போராட்ட அரசியலில் தமிழ் மக்கள் பேரவையும் கொலோச்சினால், தமது இருப்பு அல்லது அந்த வெளி ஒட்டுமொத்தமாக மீண்டும் காணாமற்போய்விடும் என்பது தொடர்பிலான பயத்தின் காரணமாகும்.
ஏனெனில், ஆயுதப் போராட்டங்கள் கோலொச்சிய காலத்தில் புத்திஜீவிகளாக தம்மைக் கருத்திக் கொண்ட தரப்பு தீண்டத்தகாதவர்களாக இருந்தது. அது, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் தம்மை மெல்லக் கட்டமைத்து ‘மேல் வர்க்க – புத்திஜீவிகள்’ தளமாக வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கின்ற தருணத்தில் மக்கள் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணையும் போராட்டங்கள் வெற்றி பெற்றால், அது அச்சுறுத்தலாகிவிடும் என்று அஞ்சுகின்றது. அதன்போக்கில் அவர்கள் ‘எழுக தமிழ்’ வெற்றிக்கும் – தோல்விக்கும் இடையிலான ஒரு பேரணியாக மாத்திரம் இருக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். இவ்வாறான, பின்னணிகளின் மத்தியில் தான் தமிழ் மக்கள் எழுக தமிழை எதிர்கொள்கின்றார்கள்!
புருஜோத்மன் : தங்கமயில்