பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்

226 0

இதன்போது மேற்குறித்த நீர் விநியோகத் திட்டம் தொடர்பான முன்மொழிவை சபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சமர்ப்பித்தார். குறித்த முன்மொழிவை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வழிமொழிந்ததையடுத்து சபையினர் ஏகமனதாக இதற்கான ஒப்புதலை வழங்கினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்

கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி யாழ்.குடாநாட்டின் நீர் பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் நான் கலந்து கொண்டிருந்தேன். இதன்போது வருடம் முழுவதும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலி ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் கடலை சென்றடைகிறது.

இந்த நீரை வழிமறித்து பொருத்தமான ஒரு இடத்தில் தேக்குவதன் ஊடாக யாழ்.குடாநாட்டின் குடிநீர் தேவைக்கான நீரை கொண்டுவர இயலும் என கூறியிருந்தேன். அந்த கூட்டத்திலேயே இவ்வாறான யோசனையை இதுவரை எவரும் கூறியிருக்கவில்லை எனவும், இந்த யோசனை ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நடைமுறைக்கு சாத்தியமானதும் என வடமாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) கூறியிருந்தார்.

ஆகவே எனது யோசனை தொடர்பாக மேல் நடவடிக்கை எடுங்கள் என நான் பிரதி பிரதம செயலாளரிடம் கேட்டிருந்தேன். அதனடிப்படையில் மாகாண நீர்ப் பாசன திணைக்கள பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட பிரதி பிரதம செயலாளர் எனது யோசனை தொடர்பான சாத்தியக் கூற்று அறிக்கை ஒன்றிணை தயாரித்து பெற்றுள்ளார்.

பின்னரதனை இறுதி செய்து கொண்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி பிரதமர் தலமையில் நடைபெற்ற அதிகாரிகளுக்கான சந்திப்பில் அந்த சாத்தியக்கூற்று அறிக்யைினையும் எனது யோசனையினையும் பிரதம செயலர், பிரதி பிரதம செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.

அது பிரதமரினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியானது இந்த திட்டத்திற்கான நிதியை வழங்க முன்வந்திருக்கின்றது. இந்த திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பரப்பங் குளத்தில் அண்ணளவாக கொள்ளளவுடைய நீர்த்தேக்கத்தை உருவாக்கி அங்கிருந்து குழாய் மூலமாக நீரை யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவருவதன் ஊடாக குடாநாட்டின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.

மேலும் இரணைமடு திட்டம் உள்ளிட்ட மற்றய நீர்ப்பாசன திட்டங்கள் தனியானவை. அவற்றுடன் இந்த திட்டமானது இணையாது. மேலும் இரணைமடு குளத்தின் கீழ் 7 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் அது தற்போது 16 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது. அதன் ஊடாக அந்த விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

அங்கு எங்களுடைய தலையீடுகளை தவிர்க்கலாம் என அண்மையில் நீர் சம்மந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் நான் கூறியிருந்த விடயத்தை நீர் சம்மந்தமாக நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் சிவபாலன் கூட ஏற்றுக் கொண்டிருக்கின்றார். எனவே பாலி ஆற்று திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சபை அங்கீகாரம் வழங்கவேண்டும்.

என கேட்டதுடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முழுமையாக செயற்பட்ட பிரதம செயலாளர் பத்திநாதன், பிரதி பிரதம செயலாளர் சண்முகானந்தன், நீர்ப்பாசன பணிப்பாளர் பிறேம்குமார் ஆகியோருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறுவதுடன், இந்த திட்டத்தில் தொடர்ந்தும் அவர்கள் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும். மேலும் இந்த திட்டத்தினால் எவருக்கும் பாதிப்பில்லை என கூறினார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் திட்டத்தை வரவேற்று வழிமொழிந்ததுடன் சபை ஏகோபித்த ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என கூறினார். அதற்கமைய சபை ஏகமனதாக ஆதரவை வழங்கி ஏற்றுக்கொண்டது.

Leave a comment