வவுனியாவில் இன்று பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவினர் இன்று அதிகாலை ஓமந்தை சந்தி பகுதியில் கிளிநொச்சியிலிருந்து கிண்ணியா, திருகோணமலைக்குச் சென்ற டொல்பின் ரக வாகனம் ஒன்றினை மறித்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது அவ்வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 7 கிலோ 924 கிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதை எடுத்துச் சென்ற வாகனச்சாரதி உட்பட கிண்ணியாவைச் சேர்ந்த 19, 26, 32 வயதுடைய மூவரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நடவடிக்கையின்போது உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் தலைமையிலான குழுவே குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போதை ஒழிப்புப்பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.