கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
8.6 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை ஆகிய 6 ரெயில் நிலையங்கள் உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, நங்கநல்லூர் சாலை ஆகிய பகுதிகளுக்கு ரூ.40 கட்டணமாகும்.
சின்னமலையில் இருந்து கிண்டிக்கு ரூ.10, ஆலந்தூர் பரங்கிமலை, ஈக்காட்டு தாங்கலுக்கு ரூ.20, மீனம்பாக்கத்திற்கு ரூ.30, விமான நிலையத்திற்கு ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் மெட்ரோ ரெயில் சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இயக்கப்படும்.
புதிதாக தொடங்கப்பட்ட விமான நிலையம் – சின்னமலை இடையே பீக்அவர்சில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும், கூட்டம் நெரிசல் இல்லாத நேரத்தில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் டிக்கெட் பெறுவதற்கு 2 கவுண்டர்களும், 2 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தானியங்கி பயணச்சீட்டு எந்திரத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் டிக்கெட் கவுண்டர்களை பயன்படுத்தலாம்.
மெட்ரோ ரெயில் பயணத்திற்கு ஸ்மார்ட்கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த கார்டுகள் ரூ.50 முதல் ரு.3000 வரை விற்கப்படுகின்றன. இதனை டிக்கெட் கவுண்டர்களில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பயணத்திற்கும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தும் போது அதில் உள்ள தொகை குறைந்து கொண்டே வரும்.
தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் எந்திரம் மூலம் பணம், கடன் அட்டை மற்றும் பற்று அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு மூலம் டோக்கன் வடிவிலான பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
விமான நிலையம்- சின்னமலை இடையே மெட்ரோ ரெயில், உயர்மட்ட பாதையிலும் சுரங்கப்பாதையிலும் செல்கிறது. பெரும்பாலான தூரம் உயர்மட்ட பாதையாக இருந்தாலும் மீனம்பாக்கத்தில் இருந்து விமான நிலையம் இடைப்பட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் செல்கின்றன.
சுரங்கப்பாதை பயணத்தை முதன் முதலாக சென்னை மக்கள் நேற்று அனுபவித்தனர். இந்த பயணத்தின்போது பலரும் செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டனர். சுரங்கப்பாதையில் ரெயில் செல்லும்போது ஒரு விதமான புது உணர்வை அறிந்தோம். இந்த பயணம் மகிழ்ச்சியாக இருந்தது என்று பயணிகள் தெரிவித்தனர்.