சார்லட் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த கீத் லாமண்ட் ஸ்காட் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் முயற்சியில் 12 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வடக்கு கரோலினா மாகாணத்தில் சார்லட் நகரில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை), கருப்பு இனத்தை சேர்ந்த கீத் லாமண்ட் ஸ்காட் (வயது 43) என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்கு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் பிடிவாரண்டுடன் சென்றபோது, அங்கு காரில் துப்பாக்கியுடன் வந்திறங்கிய ஸ்காட்டால் போலீஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி, பிரெண்ட்லி வின்சன் என்ற போலீஸ் அதிகாரி அவரை சுட்டுக்கொன்று விட்டார் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கருப்பு இனத்தவர் கண்டன போராட்டங்களை தொடங்கினர். அவர்களை கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போலீசார் விரட்டியடித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள், போலீஸ் வாகனங்களை தாக்கினார்கள். போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசினர். இதில் 12 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
நேற்று காலை, ஸ்காட் கொல்லப்பட்ட இடத்தில் கருப்பு இனத்தவர் திரண்டு வந்து, சாலையில் தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.