வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள்

392 0

வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள்: மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தலின்போது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் வருமாறு:-

* உள்ளாட்சி தேர்தல் விவரங்களை அறிந்துகொள்ள மற்றும் புகார் தெரிவிக்க இரண்டு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் பி.எஸ்.என்.எல். மூலம் பெற்று அவற்றை பொதுமக்கள் அறிந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* திரையரங்குகளில் தேர்தல் விழிப்புணர்வை சிலைடுகள் மூலம் இலவசமாக விளம்பரப்படுத்த வேண்டும்.

* உள்ளூர் கேபிள் டிவி இயக்குபவர்கள் மூலம் தொலைக்காட்சிகளில் இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டும்.

* பொதுமக்கள் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும்.

* சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரங்களில் வாக்களிப்பதன் அவசியம் பற்றி அச்சடிக்கப்பட வேண்டும்.

* வாய்ப்பிருப்பின் மின்னஞ்சல் (இ-மெயில்), டுவிட்டர், முகநூல் (பேஸ்புக்), குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) போன்றவற்றின் மூலமாகவும் வாக்களிக்க கோரும் வாசகங்களை பயன்படுத்தலாம்.

* மாநில தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்படும் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான குறும்படம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் வீடியோ படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும்.

இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரை பயன்படுத்தி மேற்கொண்டு வாக்காளர்கள் அதிகபட்சமாக வாக்களிக்க ஆவன செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.