காவிரி பிரச்சனையில் பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த அரசாக இருந்தாலும் ஏற்று நடக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் தவறு செய்கின்றனர். தமிழகத்துக்கு தர வேண்டிய நியாயமான தண்ணீரை தர மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி சதானந்த கவுடா ஒருதலைபட்சமாக பேசியது கண்டிக்கத்தக்கது. அவரை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்க வேண்டும். கர்நாடக விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்.
தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பெருகிக்கொண்டே வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இதை பற்றி தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று கூறுவதில் அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் தற்போது தமிழக அரசு இல்லை. ராம்குமார் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த விவகாரத்தில் பல குழப்பங்கள் நிலவுகிறது. விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.