சென்னை கோயம்பேட்டில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் புகை வெளியேறியதில் மூச்சு திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மெட்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது38). தனியார் சிமெண்டு கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தார்.
இவரது மனைவி கலையரசி (30). இவர்களது மகன் கார்த்திக் (8). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று இரவு அனைவரும் வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஏ.சி.யை இயக்கிவிட்டு தூங்கினர். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் வரை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் இறந்து கிடந்தனர்.
அறையில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. ஏ.சி. எந்திர புகையால் சரவணன், அவரது மனைவி கலையரசு, மகன் கார்த்திக் ஆகியோர் மூச்சு திணறி இறந்திருப்பது தெரிந்தது.
மெட்டுக்குளம் பகுதியில் நள்ளிரவில் மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்வெர்டர் மூலம் ஏ.சி. எந்திரம் இயங்கி வந்ததாக தெரிகிறது.
இந்த பின்னர் மீண்டும் மின்சாரம் வந்ததால் இன்வெட்டரில் சென்ற மின்சாரம் ஆப் ஆகவில்லை. இதனால் ஏ.சி. எந்திரத்துக்கு சென்ற மின் சப்ளையில் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் 3 பேரும் மயங்கி உள்ளனர்.
தூக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.
இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஏ.சி.எந்திர புகையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.