டி.டி.வி.தினகரனிடம் இருந்து இழுக்க 4 எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருதாச்சலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 4 பேருக்கு சபாநாயகர் நோட்டுஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதற்கான காரணம் பற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவது ஆளும் கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார்.
அதன்பிறகும் கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் இருப்பது இவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. 4 பேரும் தினகரனை விட்டு பிரியமாட்டார்கள் என்பதால் இவர்களை பயமுறுத்தி எடப்பாடி பழனிசாமி பக்கம் இழுப்பதற்காகவே நோட்டீஸ் அனுப்ப போவதாக மிரட்டுகிறார்.
தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் இரு பக்கமும் ‘பேலன்ஸ்’ செய்வதால் அவர்களை கொறடா கண்டு கொள்ளவில்லை.
இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் அப்படி என்ன தவறு செய்து விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த விசயத்தில் சர்வாதிகாரமாக எடுக்கும் முடிவுகள் சபாநாயகருக்கு கெட்ட பெயரைதான் ஏற்படுத்தும்.
ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு வராததால் விடை தெரியாமல் தவிக்கிறோம். இப்போது இந்த வரிசையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களா? என்று நினைக்கிறபோது சினிமாவில் வரும் வசனம் போல் மறுபடியும் முதுலில் இருந்தா? என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.