மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் -மஹேஷ் சேனாநாயக

228 0

மாவீரர் தினம்  அனுஷ்டிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டிய விடயமேயாகும், தமிழ் மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்த முடியும் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்தார்.

எனினும் வடக்கில் மாவீரர் தினத்தை அனுஸ்டித்தார்கள் என்றதற்காக நாட்டின் பாதுகாப்பு பலவீனமடையவில்லை, தமிழ் மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்த முடியும், அதில் எந்தத் தவறும் இல்லை  எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்த வெற்றி தனி நபர் சார்ந்தது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

அனுராதபுரத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இராணுவ நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்தினை முன்வைத்தார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

வடக்கில் மீண்டும் பிரிவினைவாத செயற்பாடுகள் தலைதூக்குவதாக கூறும் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனினும் மாவீரர் தினம் அல்லது  புலிகளை நினைவுகூரும்  எந்த நிகழ்வும் நடக்கப்படக்கூடாது. அவ்வாறு ஏதேனும் பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெறும் என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கபட் வேண்டும்.

எனினும் யுத்தத்தில் உயிரிழந்த  தமிழ் மக்களை நினைவு கூருவதில் எந்த தவறும் இல்லை. இழந்தவர்களை நினைவு கூருவது அனைவரதும் உரிமையாகும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்தில் செய்யக்கூடியது உகந்தது அல்ல. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்பதற்காக நாட்டின் பாதுகாப்பு சீரழியவில்லை. ஒரு நாளில்  நான்கு மணிநேரம் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள் என்ற காரணத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கூறுவது ஏற்றுகொள்ளக்கூடியதல்ல.  நாட்டின் பாதுகாப்பை   உறுதிப்படுத்த   இலங்கையில் பாதுகாப்பு படைகள் எந்நேரமும் பலமாகவே உள்ளன.

இன்று நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. இலங்கை  தீவு என்ற காரணத்தினால் கடத்தல்கள் அதிகமாக இடம்பெற்றுகின்றன.

எனினும் எமது இராணுவ புலனாய்வு சேவை பலமாக உள்ளது. கடற்படையின் புலனாய்வு சேவை மூலமாகவே கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. நாம் அனைவரும் இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். யுத்தத்தின் பின்னரும்  நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில்  இராணுவத்தை அதிகம் ஈடுபடுத்தியுள்ளனர். அதற்கு அரசாங்கம் பூரண உதவிகளை செய்து வருகின்றது. எமது நோக்கமும் இலங்கையின் அபிவிருத்தியில் இராணுவத்தையும் இணைத்துக்கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்பதேயாகும்.

கேள்வி :-யுத்த வெற்றி தொடர்பில் ஜனாதிபதி கூறிய கருத்துக்கள் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் :- ஜனாதிபதி கூறும் கருத்துக்களுக்கு என்னால் எதனையும் கூற முடியாது. யுத்த காலகட்டத்தில்  நான் சாதாரண படை வீரனாக இருந்தேன். கருத்து தெரிவிக்க கூடிய அதிகாரம் எனக்கு இருக்கவில்லை. அறிந்திருக்கவும் இல்லை. எவ்வாறு இருப்பினும் அனைவரும் இணைந்து யுத்தத்தை வெற்றிகொண்டுள்ளோம். இதனை  தனி நபர்களுக்கான வெற்றியாக கருதாது நாட்டுக்கானதும் நாட்டு மக்களுக்கான வெற்றியாக கருத வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Leave a comment