ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ என்கிற புயல் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள்.
ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ என்கிற புயல் கடுமையாக தாக்கியது.
அங்கு மணிக்கு 216 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் ஒசாகா மாகாணத்தின் பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
புயல் மற்றும் மழையை தொடர்ந்து அங்கு விமான சேவை தடைபட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புல்லட் ரெயில் உள்பட அனைத்து ரெயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.
‘டிராமி’ புயலுக்கு இதுவரை 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடந்து வருகின்றன.
கடந்த மாதம் ஜப்பானை ஜெபி என்கிற பயங்கர புயல் தாக்கியதும், அது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதோடு, 7 பேரை பலிகொண்டதும் நினைவுகூரத்தக்கது.