இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்காமல் இருக்க அமெரிக்காவுடன் வரத்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25-ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘வரிவிதிப்பு ராஜா’ (இந்தியா) அமெரிக்காவுடன் வரத்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
வரிவிதிப்பு ராஜா என இந்தியாவை அழைத்தற்கான காரணம் என்ன ? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிகமாக இந்தியா வரிவிதிக்கிறது. ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இந்தியாவில் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகம், இது அமெரிக்காவுக்கு தடையாக உள்ளது அதனால் தான் இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என அழைத்ததாக அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக இந்தியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இதுவரை அவர்கள் வேறு எந்த நாட்டுடனும் இதைப்போன்று ஒப்பந்தம் செய்தது கிடையாது.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரிவிதிப்பதற்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கப்படும் என எச்சரித்த நிலையில் என்னை மகிழ்விப்பதற்க்காக இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ள இந்தியா விரும்புகிறது.’
இவ்வாறு அவர் தெரிவித்தார். #