மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சையது கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் மந்திரி

294 0

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையது ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாகிஸ்தான் மந்திரி கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சட்டி வருகிறது. குறிப்பாக மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்படுபவர் பயங்கரவாதி ஹபீஸ் சையத். இவர் ‘ஜமாஅத் உத் தவா’ என்னும் பெயரில் அமைப்பு நடத்தி வருகிறார்.

ஒருபுறம் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு,  மறுபுறம் பயங்கரவாதிகளுடன் கைகோர்ப்பு என பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டு வருகிறது.

இதற்கு  உதாரணமாக  இஸ்லாமாபாத்தில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது  தலைமையில் கூட்டம் ஒன்று நடந்து உள்ளது.  இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பாகிஸ்தான்  பாதுகாப்பு, காஷ்மீர், இந்தியாவின் மிரட்டல்கள் குறித்த ஆலோசனை கூட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பயங்கரவாதி  தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் மத விவகாரங்கள் மற்றும் மத நல்லிணக்க துறை அமைச்சர் நூர் உல் ஹக் குதாரி கலந்து கொண்டார்.

தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அமைதி பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான், பயங்கரவாதி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு தனது அமைச்சரை அனுப்பி உள்ளதற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

Leave a comment