இன வன்முறைகள் மிகக் கொடூரமான முறையில் அரங்கேறின!

252 0

இலங்கை முஸ்லிம் அமைச்சர்களை கொலை செய்வதற்கும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு இனக்கலவரங்களை தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்படுத்துவதற்கும் வெளிநாட்டிலுள்ள டயஸ்போரா அமைப்பின் மூலம் தனக்கு நிதிஉதவிகள் வழங்கப்பட்டதாக ;தூசன விரோதி பலகாய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளமை தொடர்பில் குறித்த நபரை கைது செய்து விரிவான விசாரணை நடத்தி இனக்கலவரங்களை ஏற்படுத்துவதன் பின்னணி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் ஹரீஸ் கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (1) திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சனி அபேசிங்கவை நேரில் சந்தித்து சமர்ப்பித்துள்ள குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நடைபெறும் இனவாத செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை நாமல் குமார வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டிலுள்ள துசேர பீரிஸ் எனும் டயஸ்போரா அமைப்பினைச் சேர்ந்தவர் குறித்த நபருக்கு பணம் அனுப்பியதற்கான வங்கி பற்றுச்சீட்டு மற்றும் காசோலைப் பிரதி என்பவற்றை ஊடகங்களுக்கு காண்பித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக அம்பாறை, திகன மற்றும் காலி பிரதேசங்களில் இன வன்முறைகள் மிகக் கொடூரமான முறையில் அரங்கேறின, இவ் இனக்கலவரங்களின் பின்னணியில் இவ்வாறான அமைப்புகள் இருப்பதாக நாங்கள் கூறிவந்தோம், அது தற்போது நாமல் குமாரவினால் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இச்செயற்பாடுகளின் பின்னணியில் யார் யார் உள்ளனர்? அரசியல் பின்னணி உள்ளதா? என்பன தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்குமாறு அம்முறைப்பாட்டில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment