ஊடகவியலாளர் சிவராமின் கொலை தொடர்பாக முக்கிய தடயம் ஒன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணையின்போது ஊடகவியலாளர் சிவராமின் கைத்தொலைபேசியை குற்றதமப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர்.
ஊடகவியலாளர் சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பம்பலப்பிட்டி காவல்நிலையத்திற்கு எதிர்ப்பக்கத்தில் இனந்தெரியாத 4பேரினால் கடத்திச் செல்லப்பட்டார்.
இவரது சடலம் மறுநாள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
சிவராம் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது கைத்தொலைபேசியை சந்தேகநபர்கள் தாம் செல்லும் இடமெல்லாம் அக்கைத்தொலைபேசியைக் கொண்டு திரிந்துள்ளனர். இதனால் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இலகுவாக கொலையாளியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினராலேயே இக்கொலை திட்டமிட்டு நடாத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவரது கொலைக்கு புளொட் அமைப்பின் உறுப்பினர்களான பீற்றர் மற்றும் ஆர்ஆர் என அழைக்கப்படும் இராகவன் ஆகியோர் இராணுவப் புலனாய்வு அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் பீற்றர் என்பர் தற்போது திருகோணமலையில் வசித்து வருவதாகவும், ஆர் ஆர் என அழைக்கப்படும் இராகவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனுடன் யாழ்ப்பாணத்தில் நிற்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் விரைவில் கைதுசெய்யப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.