தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் காணாமல்போனவர்களின் பிள்ளைகள் பல்வேறு ஏக்கங்களுடன் காணப்படுவதாகவும் அவற்றினை புரிந்துகொண்டு சர்வதேசம் உதவவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த கவனயீர்ப்பு பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் வட கிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு சின்ன வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து பல்வேறு கோரிக்கைகளை தாங்கியதாக பேரணி காந்திபூங்காவரையில் சென்றது. காந்திபூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் தமது தந்தையினரை தங்களிடம் ஒப்படைக்க இந்த சிறுவர் தினத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறுவர்களும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.