பொருளாதார பிரச்சினையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையினால் ஒருபோதும் தீர்வுகாண முடியாது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்
உலகப் பொருளாதார பிரச்சினை காரணமாக எமது நாட்டிலும் அது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றபோதும், அரசாங்கத்தின் லிபரல்வாத, திறந்த பொருளாதார கொள்கை காரணமாக பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் இந்த வருடத்தில் 9.7வீதத்தினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் நாட்டின் பொருளாதார பிரச்சினையை கட்டுப்படுத்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துவருகின்றபோதும் அந்த நடவடிக்கைகள் தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க போதுமானதாக இல்லை. குறிப்பாக இறக்குமதி செலவை டொலர் மில்லியன் 500 தொடக்கம் 1000 வரை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். என்றாலும் இந்த நடவடிக்கையானது ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண போதுமானதாக இல்லை.