ஜனாதிபதியே முதலாவதாகச் சாட்சியமளிக்க வேண்டும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

264 0

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் தொடர்பாக உண்மைகள், தமக்குத் தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையில், ஜனாதிபதியே முதலாவதாகச் சாட்சியமளிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, உண்மையைக் கண்டறியும் வரை, பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான முயற்சிகளை எதிர்ப்பதாகவும், அக்கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவரால் எழுப்பட்ட வினா ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே, கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதியுடன் முக்கிய கலந்துரையாடலொன்று உள்ள நிலையில், இராணுவத்தினருக்கும் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு என்ற திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தால், கூட்டமைப்பு அதை எவ்வாறு கையாளுமென, சுமந்திரன் எம்.பியிடம் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாகக் கணித்து, பொதுமன்னிப்பு வழங்குகின்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால், கூட்டமைப்பு அதை நிராகரிக்கும்.

“பொதுமன்னிப்பு என்பது, விசாரணை இன்றி, அனைவரையும் விடுவிப்பது. அதை நாம் கோரவில்லை. நாம் கேட்டது, நீண்டகால அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு என்பதையேயாகும்” என்று குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல் என்பதும், உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதும் அத்தியாவசியமானது எனத் தெரிவித்த அவர், அவ்வாறு உண்மை கண்டறியப்பட்ட பின்னர், இருதரப்பினருக்கும் மன்னிப்பு வழங்குவது தொடர்பாகப் பேச முடியும் எனவும், உண்மை கண்டறியப்படாமல், ஒரு தரப்பினருக்கு மாத்திரம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலம் சிறையில் இருக்கின்ற நிலையிலும், மறு பக்கத்தில் யார், எவர் என்று தெரியாமல், என்ன குற்றமிழைத்தார்கள் என்று தெளிவுபடுத்தப்படாமலும், அவர்களுக்கு மன்னிப்பு என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயமானது எனக் கேள்வியெழுப்பினார்.

அதேபோல், பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி சிறிசேன முன்வைப்பார் என்ற எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அவ்வாறு உண்மையைக் கண்டறியாமல் பொதுமன்னிப்பு என்பது, சர்வதேச சட்ட நியமங்களுக்கும் சர்வதேச நாடுகளுடைய எதிர்பார்ப்புக்கும் முரணாகவே அமையுமெனத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, அது தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும் இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியிருந்ததாகவும், அது தொடர்பான அழுத்தத்தின் காரணமாகவே, அத்தகையை திட்டத்தை, ஐ.நாவின் ஜனாதிபதி முன்வைத்திருக்காமல் விட்டிருக்கக்கூடுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment