வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிறிஸ் கத்தி உட்பட வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நல்லூரைச் சேர்ந்த இளைஞரொருவரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்வியங்காடு பகுதியில் தொடர்ச்சியாக 4 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று, கடந்த 6 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. அதில் தந்தை, மகன் மற்றும் குடும்பப் பெண் என மூவர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த மூன்று பேர் நேற்று ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகர் மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.