தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும் ஒவ்வொரு காரணம் கூறப்பட்டு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் அவதானிக்க முடியும். ஆனால், உண்ணாவிரதக் கைதிகள் ஒவ்வொரு நிமிடமும் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
காலதாமதம் செய்யப்படும் ஒவ்வொரு நாள்களும் அவர்கள் சாவை நோக்கித் தள்ளப்படும் நாட்களேயென தெரிவித்துள்ளார் இதுவரை அரசியல் கைதிகளை ஒருநாளேனும் எட்டிக்கூட பார்த்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் அவரும் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
“அநுராதபுரத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களை மன்னிப்பின் கீழ் விடுவிக்கும்படி அல்லது குறுகியகால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுமாறு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலும் நீதிமன்ற விசாரணைக்கும் உட்படுத்தப்படாமலும் உள்ள நிலையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்துவது இதுதான் முதல்தடவையல்ல. ஒவ்வொரு முறையும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவதும் அவர்களின் போராட்டங்கள் தொடர்பாக அலட்சியப் போக்கைக் காட்டுவதும் அவர்கள் சாவின் விளிம்பை அடையும் நிலையில் சில வாக்குறுதிகளை வழங்கிப் போராட்டங்களை நிறுத்திவிட்டுப் பின்பு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடுவதும், அதற்கும் சட்டக் காரணங்களை முன்வைப்பதும் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக உள்ளன.
இந்தக் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நியமங்களுக்கு விரோதமானது எனவும் அது நீக்கப்பட வேண்டும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கையும் இணங்கியிருந்தது. இணக்கம் காணப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும்போதும் அந்த மனிதகுல விரோதச் சட்டம் நீக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் இலங்கை அரச தரப்பால் நீக்கப்படவுள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்தான். கைதிகள் விடுதலை தொடர்பாகப் பிரச்சினைகள் முன்வைக்கப்படும்போது இந்தச் சட்டமே காண்பிக்கப்படுகின்றது. அரசியல் கைதிகள் விவகாரம் நியாயத்தின் அடிப்படையில் நோக்கப்படாமல் இனக்குரோத அடிப்படையிலேயே நோக்கப்படுவதாக நாம் கருதுகின்றோம்.
ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உறுப்புரிமை கொண்ட ஒரு தேசத்துக்கு இப்படியான மனித குல விரோத, இனக் குரோத அடிப்படையிலான போக்கு எள்ளவும் பொருத்தமற்றதென்றே நாம் கருதுகின்றோம்.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முயற்சிகளை மேற்கொண்டபோது சட்டமா அதிபர் நாட்டில் இல்லை எனவும், அவர் நாடு திரும்பியதும் அது தொடர்பில் பேசப்படும் எனவும் கூறப்பட்டது. அதன் பின்னர் பிரதமர், நீதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அலரிமாளிகையில் பேச்சு நடத்தியபோது ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் மீண்டும் பேச்சு இடம்பெறும் எனவும் கூறப்பட்டது.
எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியின்போதும் ஒவ்வொரு காரணம் கூறப்பட்டு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் அவதானிக்க முடியும். ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொரு நிமிடமும் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். காலதாமதம் செய்யப்படும் ஒவ்வொரு நாட்களும் அவர்கள் சாவை நோக்கித் தள்ளப்படும் நாட்களே! அதிலும் ஒரு கைதி சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இன்னொருவர் ஏற்கனவே பாரிசவாதப் பாதிப்புக்கு உள்ளானவர் என்றும் அவர் மீண்டும் அதே ஆபத்துக்கு உட்படும் ஆபத்து உண்டு எனவும் கூறப்படுகின்றது. ஆனால், அரச தரப்பினர் கைதிகளின் உயிராபத்து நிலை தொடர்பாகவோ எதிர்கொள்ளக்கூடிய சாவு பற்றியோ பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
ஒருபுறம் அரசியல் கைதிகளைச் சாவை நோக்கித் தள்ளிக் கொண்டு வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற கைதிகளைப் விடுவித்துப் பெரும் விளம்பரம் செய்து சர்வதேச சமூகத்துக்கு வானவேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற இடங்களில் மட்டுமனிறிக் கொழும்பிலும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ஆகியோரைக் கொலைச் செய்யச் சதி செய்ததாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நாலந்த சில்வா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இவ்விடயம் தொடர்பான விசாரணையின்போது ஜனாதிபதியை கிழக்கு மாகாணத்தில் வைத்துக் கொலை செய்துவிட்டு பழியை முன்னாள் புலி உறுப்பினரான புஷ்பராஜன் தலையில் சுமத்தத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைதுகளும் விசாரணைகளும் எப்படி அமைந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு மன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். இல்லையேல் குறுகியகால புனர்வாழ்வில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் வரை விட்டுவிட்டு அவர்கள் ஏற்கனவே இருந்த நோய் காரணமாகவே உயிரிழந்தனர் என்றோ இயற்கை உயிரிழப்பு என்றோ காரணங்களைக் கண்டுபிடித்து முன்வைப்பதில் அர்த்தமில்லை”என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை அரசியல் கைதிகளை எட்டிக்கூட பார்த்திராத அரசியல்வாதிகளுள் சரவணபவனும் ஒருவராவார்.