எந்த ஒரு மாணவனையும் மதம்மாற்றம் செய்வதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. அப்படி செய்ய முற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் உயிரிழந்த இறக்குவானை பகுதியை சேர்ந்த மாணவன் தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபரிடமும் அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளிடமும் மாணவனின் உயிரிழப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை கோரியிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியரும் எழுத்தாளருமான ராஜலிங்கம் ஆங்கில மொழியில் எழுதிய மிகச் சிறந்த தலைவர்கள் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (29) மாலை நடைபெற்றது.
இந்த நூல் வெளியீடானது லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. நீண்ட ஒரு இடைவேளைக்கு பின்பு மலையகத்தில் வெளியிடப்பட்ட ஆங்கில நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அண்மையில் இறக்குவானை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் மன அலுத்தம் காரணமாகவே இந்த முடிவை அவன் எடுத்துள்ளதாக எனக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தகவல்கள் கிடைத்துள்ளன. நான் இந்த செய்தியை கேட்டதும் கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவன் அந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் யார் என்பதை கண்டறிய வேண்டும். அவனுக்கு ஏற்பட்டுள்ள மன அலுத்தம் எதனால் யாரால் உண்மையிலேயே அவனை யார் மத மாற்றம் செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்கள். இந்த கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய கட்டாயம் எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.
எந்த காரணம் கொண்டும் யாரும் யாரையும் மத மாற்றம் செய்ய முயற்சி செய்ய கூடாது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இதனை கொண்டு போக முடியாது.
ஏனென்றால் அவர்களுடைய அந்த பருவத்தில் அவர்களுக்கு முடிவு எடுக்க முடியாத ஒரு நிலையில் இருப்பார்கள். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் எதனையும் தினிக்கவோ அவன் விரும்பாத விடயங்களை செய்யும் படியோ அவனை வற்புறுத்த கூடாது.
கல்வியில் கூட அந்த நிலைதான் ஏனென்றால் அவன் விரும்பி செய்கின்ற காரியத்தில் மாத்திரமே அவன் வெற்றிபெறுவான்.
இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். தற்பொழுது நாங்கள் பல மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்து வருகின்றோம்.நான் அண்மையில் வவுனியா, மன்னார், யாழ் பகுதிகளுக்கு சென்றிருந்தேன்.
அங்கு ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களும் ஒரு பகுதியில் முஸ்லிம்களும் ஒரு பகுதியில் சைவ சமயத்தை சார்ந்தவர்களும் இன்னும் ஒரு பகுதியில் பௌத்தர்களும் வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு தற்பொழுது படிப்படியாக மத நல்லினக்கம் ஏற்பட்டு வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.