உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது-அரவிந்தகுமார்

532 0

கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்காக ஜனாதிபதியின் செயலகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புலமைப்பரிசில்களை எமது சமூக மாணவ, மாணவிகள் பூரணமாக பயன்படுத்திக்கொண்டு அதற்கான விண்ணப்பங்களை ஒப்படைக்க முன்வர வேண்டும்.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றி அப் பரீட்சையில் சித்தியடைந்து 2020 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் மாணவ, மாணவிகளுக்கு புலமைப் பரிசில்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

விண்ணப்பதாரியின் குடும்பத்தின் மாத வருமானம் 10 ஆயரம் ரூபாவுக்கும் மேற்படாதிருத்தல், அரச பாடசாலையில் கல்வி கற்றிருத்தல், 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு முதற் தடவையாக தோற்றி 2020 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்கான பூரண தகைமைகளை பூர்த்தி செய்திருத்தல், விண்ணப்பதாரி தரம் 5 புலமைப்பரிசில் நிதியுதவிகள் பெறாதவராக இருத்தல் போன்ற தகைமைகள் உடையவர்கள் மேற்படி புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

புலமைப்பரிசில்கள் பெறுபவர்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை மாதாந்தம் 500 ரூபாவரை 24 மாதத்திற்கு புலமைப்பரிசில் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் உரிய மாதிரி அமைப்பைத் தழுவி தயாரித்துக்கொண்ட விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து தாம் க.பொ.த. சாதாரண பரீட்சைக்காக கற்றல் நடவடிக்கைகளில் மேற்கொண்ட பாடசாலை அதிபர்களிடம் மாத்திரம் 12.10.2018 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும்.

பாடசாலை அதிபர் உரிய நடவடிக்கைகளின் பின்னர் தேர்வுகளை நடத்தி அதன் பின் வலயக் கல்வி பணிப்பாளர் தமது சிபார்சுகளுடன் கூடிய விண்ணப்பப்படிவங்களை 16.11.2018 ஆம் திகதிற்கு முன்னர் மாகாண கல்விப் பணிப்பாளரிடமும் ஒப்படைக்க வேண்டியிருப்பதால் தாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தெரிவு செய்யப்படும் அனைத்து புலமைப்பரிசில் பெறுபவர்களின் இலங்கை வங்கி கணக்கிற்கு நேரடியாக தவணைப் பணம் வைப்பிலிடும் முறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவங்களை ஊவா மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து தமிழ் மொழி மூலமான பாடசாலை அதிபர்கள், மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் அட்டன் தலைமைக் காரியாலயம், பதுளை பிராந்திய காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மாவட்ட காரியாலயங்களிலும் மலையக மக்கள் முன்னணியின் அனைத்து உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும் 051-2224228, 055-2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். அல்லது ஜனாதிபதி நிதியத்தின் www.presidentsfund.gov.lk. என்ற இணையத்தினூடாகவும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment