அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 9 ஆயிரம் இந்தியர்கள் கைது!

244 0

சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு குடியேறிய 9 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நுழைந்து குடியேறுகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் டிரம்ப் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க சுங்க இலாகா மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். இருந்தும் ஊடுருவும் வெளி நாட்டினரின் எண்ணிக்கை குறையவில்லை.

அவர்களில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலானோர். அவர்களை தொடர்ந்து கவுதமலா, ஹோண்டுராஸ் மற்றும் எல்சால்வேடர் நாடுகளை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக நுழைகின்றனர். இவர்களுக்கு அடுத்த படியாக இந்தியர்கள் நுழைவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மெக்சிகோ எல்லை வழியாக நுழையும் இவர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு மனு செய்கின்றனர். அதில் வேறு சாதி அல்லது மதத்தினரை திருமணம் செய்ததால் கொலை மிரட்டல் வருவதாகவும் எனவே அடைக்கலம் தரும்படியும் கோரிக்கை விடுக்கின்றனர்.

2012 முதல் 2017-ம் ஆண்டு வரை அடைக்கலம் கேட்ட 42 சதவீத இந்தியர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் 79 சதவீதம் எல்சால்வேடர் நாட்டினரின் மனுவும், 78 சதவீதம் ஹோண்டுராஸ் நாட்டினரின் மனுவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு குடியேறிய 9 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த ஆண்டில் 3,162 பேர் கைதாகினர். இந்த தகவலை அமெரிக்க சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் சால்வேடர் ‌ஷமோரா தெரிவித்துள்ளார்.

Leave a comment