டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் – தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலன் மஸ்க்

272 0

தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியதற்காக டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை என அனைத்திலும் உலகளவில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனம் நாசாவிற்கு போட்டியாக விண்வெளியில் பல்வேறு ஆராய்சிகளையும் செய்து வருகிறது.

இதற்கிடையே டெஸ்லா நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்ள போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி அதன் தலைவர் எலன் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், பங்குதாரர்களிடமிருந்து, அனைத்து பங்குகளையும் தானே திரும்பப் பெற்றுக் கொண்டு நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், முதலீட்டாளர்கள் ஒன்று நிறுவனத்திலேயே தொடரலாம் அல்லது ஒரு பங்குக்கு தலா 420 டாலர்களை பெற்றுக்கொண்டு விற்றுவிடலாம் என்றும் அறிவித்திருந்தார்.

அவரது இந்த முடிவு அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது முடிவுக்கு பின்னர் கிடைத்த எதிர்மறையான கருத்துக்களை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து தரப்பினரிடமும் எலான் மஸ்க் கடந்த ஒரு வார காலமாக ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.

இதற்கிடையே, எலான் மஸ்க் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட முயன்றதாக, அவர் மீது மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கழகம் வழக்கு தொடர்ந்தது.

பங்குகளை திரும்ப வாங்குவதற்காக தன்னிடம் உள்ள நிதி ஆதாரங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கமல் எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பினால் பங்கு சந்தையில் குழப்பம் மற்றும் முதலீட்டாலர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.290 கோடி) தொகையை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. இந்த தொகையை செலுத்த எலன் மஸ்க்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அடுத்த 45 நாட்களுக்குள் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மஸ்க் விலக வேண்டும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நிறுவனத்தின் தலைவராக இருக்க கூடாது எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொடர்வதற்கு தடை ஏதும் இல்லை. இரண்டு இயக்குனர்களை நியமித்து தலைவர் பொறுப்பை கவனித்துக்கொள்ளலாம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக எலன் மஸ்க் முடிவு செய்துள்ளார். சமீபத்தில் ஜப்பானை சேர்ந்த தொழிலதிபரை  நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை பற்றி எலன் மஸ்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment