மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை – தகவல் அறியும் உரிமை சட்டம்

258 0

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்த விவரம் கேட்கப்பட்ட நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆய்வறிக்கை பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் அடுத்தக்கட்ட பணிகளை மத்திய அரசு துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment