வடபகுதியில் பொலிஸாரிற்கு உதவியாக இராணுவம்-மகேஸ்சேனநாயக்க

471 0

வடபகுதியில் சட்டமொழுங்கை அமுல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிற்கு உதவியாக இராணுவத்தினரையும் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படைத்தரப்பினர் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

யாழ்மாவட்ட கட்டளை தளபதி பொலிஸாருக்கு உதவியாக படையினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை கோரியதை தொடர்ந்து இராணுவதளபதி  இது குறித்து பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

எனினும் இது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னர் போர் இடம்பெற்ற பகுதிகளில் நிலை கொண்டுள்ள படையினர் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி படையினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாது என பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவசர நிலைமைகளின் போதுகூட கொழும்பின் உத்தரவின்றி படையினரை பயன்படுத்த முடியாது என பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படையினர் இரவில் கூட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபவதில்லை நிர்வாக தேவைகளிற்காகவே படையினர் முகாம்களில் இருந்து வெளியே செல்கின்றனர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயுதமேந்திய கும்பல்களால் பொதுமக்களின்  அன்றாட வாழ்விற்கு பாதிப்பு  ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் எனினும் இந்த சம்பவங்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையது என வகைப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளிற்கு ஆவா குழுவே காரணம் எனவும் அவை தெரிவித்துள்ளன.

Leave a comment