நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த தகவல் அறிந்துகொள்ளும் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய எதிரணியினர் இன்று அதே சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்களை பெற்று அரசாங்கத்தையே கேள்வி கேட்கின்றனர் என நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தலைநிமிர்ந்து நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லக்கூடிய இளைஞர் சமூகம் ஒன்றை உருவாக்க வழிவகுக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.
கடந்த 10 வருட காலப்பகுதியில் உலகில் பெருபாலான நாடுகள் இந்த சர்வதேச பிரகடனத்தை தமது நாடுகளில் நிறைவேற்றிக்கொண்டனர். கடந்த வருடங்களில் தகவலை அறிந்து கொள்ளும் சட்டத்தை பல நாடுகள் நிறைவேற்றியுள்ளன. இலங்கையில் இந்த சட்டத்தை முன்னெடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது.
தற்பொழுது தகவல்களை அறிந்துக்கொள்ளும் உரிமை தொடர்பில் நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் தெளிவு அதிகரித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் அறிந்துகொண்டுள்ளனர் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
சர்வதேச தகவல் உரிமைச்சட்ட தினத்தை முன்னிட்டு நேற்று(28) கொழும்பு தாமரைத் தடாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.